#BREAKING நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நியூசிலாந்தின் தென் தீவு முழுவதும் சக்திவாய்ந்த நில அதிர்வுகள் நிலவியது. இதனைதொடர்ந்த் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டீ அனாவ் நகருக்கு அருகில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்கு செல்ல அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) மற்றும் ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) ஆகியவை, இந்த நிலநடுக்கம் 50 கி.மீ.க்கும் அதிகமான ஆழத்தில் ஏற்பட்டதாகக் கூறி, இதன் ரிக்டர் அளவை 5.9 என மதிப்பிட்டுள்ளன.
நியூசிலாந்து குடிமைப் பாதுகாப்புத் துறை தனது முகநூல் பதிவில், “இரவு 9:14 மணிக்கு ஃபியர்ட்லாந்து அருகே ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, நியூசிலாந்து கடலோரப் பகுதிகளில் வலுவான மற்றும் அசாதாரணமான நீரோட்டங்களும், கரையோரத்தில் கணிக்க முடியாத கடல் அலைகளும் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். நீச்சல் வீரர்கள், அலைச்சறுக்கு வீரர்கள், மீன்பிடிப்பவர்கள் மற்றும் கரைக்கு அருகில் நீரில் இருப்பவர்கள் என அனைவருக்கும் ஆபத்து உள்ளது. பின்வரும் பகுதிகளில் கடலில் அல்லது கடலுக்கு அருகில் இருப்பவர்கள், அங்கிருந்து வெளியேறி, கடற்கரைகள் மற்றும் கரையோரப் பகுதிகளிலிருந்தும், துறைமுகங்கள், படகுத் தளங்கள், ஆறுகள் மற்றும் கழிமுகங்களிலிருந்தும் விலகிச் செல்ல வேண்டும்” என்று கூறியுள்ளது.