×

ஃபர்ஸ்ட் டைம் இன் ஹிஸ்டரி... அமெரிக்க நாணயத்தில் கறுப்பின கவிஞர் உருவம் - பைடன் அரசின் அசத்தல் முடிவு!

 

நவ நாகரிக உலகத்திலும் அமெரிக்காவில் இப்போது வரை கறுப்பினத்தவர் மீதான அடக்குமுறை தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. சமீபத்திய உதாராணம் ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம். ஃபிளாய்டு என்ற கறுப்பினத்தவரை வெள்ளையினத்தைச் சேர்ந்த டெரிக் சாவின் என்ற காவலரால் கொலை செய்யப்பட்டார். இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த இனவெறிக்கு எதிராக Black Lives Matters என்ற இயக்கம் உலகம் முழுவதும் பரவி விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

ஆகவே கறுப்பினத்தவர்களை முற்போக்கு எண்ணம் கொண்ட வெள்ளையின மக்கள் அங்கீகரிக்க வேண்டும். எந்த இனத்திற்கும் பாகுபாடு காட்டாமல் அரசுகளும் செயல்பட வேண்டும். அப்போது தான் இனவெறியை நீர்த்துப்போக செய்ய முடியும். அதற்கு அரசு செய்ய வேண்டியது கறுப்பினத்தவர்களில் சாதனை செய்தவர்கள், ஆளுமைகளை வெள்ளையின மக்களிடம் கொண்டுசேர்ப்பது. அதைத் தான் அமெரிக்க அரசு தற்போது செய்துள்ளது. அமெரிக்க அதிபர் பைடனை பொறுத்தவரையில் இனவெறிக்கு எதிரான எண்ணம் கொண்டவர். 

அந்த வகையில் தற்போது அமெரிக்க நாணயம் ஒன்றில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஆர்வலரும் கவிஞருமான மாயா ஏஞ்சலோவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மாயாவின் உருவம் 1/4 (25 சென்ட்) டாலர் நாணயத்தில் பொறித்து வெளியிட்டிருக்கிறது அமெரிக்க அரசு. அமெரிக்க நாணயத்தில் கறுப்பின பெண் ஒருவரின் உருவமும், பெயரும் பதிக்கப்படுவது அமெரிக்க வரலாற்றிலேயே இதுவே முதன்முறை. இதனால் இந்த நாணயம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 1928ஆம் ஆண்டு மிசோரியில் பிறந்த ஏஞ்சலோ, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் மால்கம்-எக்ஸ் உடன் பணிபுரிந்த ஆகச்சிறந்த கவிஞர் மற்றும் ஆர்வலர்.

இவர் சாதித்தார் என்று சொன்னால் அதற்குப் பின் வலிகளும் இருக்கும் தானே. ஆம் அமெரிக்காவில் சிறுவயதிலே இனவெறி தாக்குதலுக்கு ஆளானவர் தான் இந்த மாயா ஏஞ்சலோ. பாலியல் வன்கொடுமைகளையும் அனுபவித்துள்ளார். ஆனால் அவற்றிலிருந்து மீண்டு வந்து எழுத்துலகில் சாதித்த கதையை I Know Why the Caged Bird Sings (கூண்டில் அடைக்கப்பட்ட பறவை ஏன் பாடுகிறது என எனக்கு தெரியும்) என்ற சுயசரிதையை எழுதி புத்தகமாக வெளியிட்டார். இனவெறி, பாலியல் வன்கொடுமையின் கோர முகம் எப்படி இருக்கும் என்பதை தோலுரித்துக் காட்டியதில் இந்த புத்தகம் ஒரு மைல்கல்.

2010ஆம் ஆண்டு அமெரிக்காவின் உயரிய மக்கள் விருதான ஜனாதிபதி விருது மாயா ஏஞ்சலாவுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு தனது 86ஆவது வயதில் மாயா ஏஞ்சலோ காலமானார்.  கடந்த 90 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்க 1/4 டாலர் நாணயத்தில், அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாசிங்டன் உருவமும் பொறிக்கப்பட்டிருந்தது. 90 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக கறுப்பின கவிஞரின் உருவம் இடம்பெற்றுள்ளது. ஒரு சமூகமாக எவ்வாறு முன்னேறியுள்ளோம் என்பதை தலைமுறைகள் கடந்து உணர்த்த இதுபோன்ற முன்னெடுப்புகள் நிச்சயம் தேவை. வரவேற்கத்தக்க மாற்றம்.