×

"ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடில்ல; எப்போ சம்பளம் போடுவீங்க" - இம்ரான் கானை அதிரவைத்த தூதரகத்தின் ட்வீட்!

 

பாகிஸ்தான் பொருளாதாரம் என்றுமே நிலையாக இருந்தது இல்லை. சீனா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளிமும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளிடமும் கடன் வாங்கியே நாட்டை நடத்தி வருவதாக நீண்ட நாட்களாக சொல்லப்பட்டு வருகிறது. மற்ற பிரதமர்களின் காலக்கட்டத்தில் இருந்த கடனை விட இம்ரான் கான் அரசு அதிக கடன் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2018 ஆகஸ்ட் முதல் 2019 ஆகஸ்ட் வரை பாகிஸ்தான் அரசு வெளிநாடுகளில் ரூ2,804 பில்லியனும், உள்நாட்டில் ரூ4,705 பில்லியனும் கடன் வாங்கியுள்ளது. இந்த தொகை தற்போது மேலும் உயர்ந்திருக்கிறது.

இது மட்டுமில்லாமல் அரசு சொத்துகளை ஏலத்தில் விற்பனை செய்யும் அளவுக்கு அங்கு பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது. இதனால் உணவுப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஏழை, எளிய மக்கள் அன்றாடம் பிழைப்பு ஓட்டுவதே பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. பற்றாக்குறைக்கு வேலைவாய்ப்புமின்மையும் தலைவிரித்தாடுகிறது. படித்த பட்டதாரி இளைஞர்கள், சொற்ப சம்பளத்தில் சிறிய சிறிய வேலைகளுக்குச் செல்கின்றனர். இச்சூழலில் பாகிஸ்தான் தூதரகத்தின் ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செர்பியாவிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்வீட்டில், "நாட்டில் இதற்கு முன்பு இல்லாத மோசமான சாதனையாக பணவீக்கம் உச்சத்தைத் தொட்டுள்ளது. அரசு ஊழியர்களாகிய நாங்களே கடந்த மூன்று மாதமாக சம்பளமின்றி வேலை பார்த்து வருகிறோம். இன்னும் எவ்வளவு நாளுக்கு அப்படி வேலை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் பிரதமர் இம்ரான் கான் அவர்களே. சம்பளம் கொடுக்காததால் எங்கள் குழந்தைகளின் பள்ளி கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. 

இதனால் எங்கள் பிள்ளைகள் துரத்தப்படுகின்றனர். இதுதான் நவீன பாகிஸ்தானா? மன்னித்து விடுங்கள் பிரதமரே. எங்களுக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ட்வீட் உலகளவில் வைரலாகவே பாகிஸ்தான் அரசு மீது விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இந்த ட்வீட் தாங்கள் பதியவில்லை என மறுத்துள்ளனர் தூதரக அதிகாரிகள்.  வெளியுறவுத்துறை அமைச்சகம், தூதரகத்தின் அனைத்து சமூகவலைதள பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுவிட்டது என கூறியது. இருப்பினும் சமூக வலைதள பக்கங்களை கூட தூதரகத்தாலும் அரசாலும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியாதா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.