×

அடுத்த அபாய மணி... 46 முறை பிறழ்வு; ஒமைக்ரானை விட வீரியம் ஜாஸ்தி - புதிய உருமாறிய IHU கொரோனா!

 

கொரோனா பெருந்தொற்று இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளுக்குப் பெரும் தலைவலியைக் கொடுத்து வருகிறது. ஒருவழியாக ஓய்ந்துவிட்டது என்று நினைக்கையில், புதிதாக உருமாறி வேறு வடிவில் ஆட்டிப்படைக்கிறது. இப்படி தான் இந்தியாவில் உருமாறிய டெல்டா உருமாற்ற கொரோனா இந்தியாவை மட்டும்மல்லாமல் பிரிட்டன், அமெரிக்கா என பல்வேறு நாடுகளையும் ஆட்டம் காண வைத்தது. சில மாதங்களாக உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில், மீண்டும் உச்சம் பெற்றுள்ளது. இதற்குக் காரணம் ஒமைக்ரான் எனும் புதிய உருமாறிய கொரோனா.

ஏற்கெனவே இருக்கும் டெல்டாவுடன் ஒமைக்ராவும் இணைந்து ஒரே வாரத்தில் மும்மடங்காக பாதிப்பை உயர்த்தியுள்ளது. அதேபோல அமெரிக்கா போன்ற நாடுகளில் டெல்டா, ஒமைக்ரான் ஆகியவற்றின் தன்மைகளையும் குணங்களையும் உள்ளடக்கிய "டெல்மைக்ரான்" தொற்றும் பதிவாகி வந்தது. இதனிடையே புத்தாண்டையொட்டி, புளோரோனா எனும் புதிய வகை தொற்று கண்டறியப்பட்டது. அதாவது ஒரு நபருக்கு ஒரே சமயம் கொரோனா மற்றும் இன்புளுயன்சாவின் தொற்று ஏற்படும். இஸ்ரேல் நாட்டில் பெண் ஒருவருக்கு தான் இந்த இரட்டை தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. 

இச்சூழலில் பிரான்ஸ் நாட்டில்  B.1.640.2 என்ற புதிய வகை வேரியன்ட்டை அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு IHU என்றும் பெயரிட்டுள்ளனர். பிரான்ஸில் 12 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஆப்பிரிக்க நாடான கேமரூன் சென்று வந்தவர்கள். அங்கே இந்த வைரஸ் பரவி வருகிறதா என்றும் ஆய்வு செய்யப்படுகிறது. முதற்கட்ட ஆய்வின்படி இந்த வேரியன்ட்டில் 46 முறை பிறழ்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை ஒமைக்ரானை விட அதிகம். மேலும் அதனை விட தீவிரம் கொண்டது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் உலக சுகாதார அமைப்பு இதுதொடர்பாக எந்த தகவலும் வெளியிடவில்லை.