×

"எங்கள் சேவையை எந்தளவுக்கு நம்பியுள்ளீர்கள் என்று தெரியும்" - மன்னிப்பு கேட்ட மார்க் சக்கர்பெர்க்! 
 

 

வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கியதற்கு ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க் மன்னிப்பு கோரியுள்ளார். 

உலகம் முழுவதும் நேற்று வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய செயலிகள் திடீரென முடங்கின. தகவல் பரிமாற்றத்தில் முக்கிய செயலிகளாக இருக்கும் இந்த செயலிகள் நேற்று இரவு 9.30மணிக்கு திடீரென முடங்கியது பயனாளர்களை பெரும் அவதிக்குள்ளாகியது. ஆரம்பத்தில் இணையதள கோளாறு என்றே தகவல்கள் வெளியாகின. பின்னர் தான், தகவல் தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக செயலிகள் முடங்கியது மக்களுக்கு தெரியவந்தது. வேறு வழியில்லாமல் பயனாளர்கள் அனைவரும் டெலிகிராம் பயன்படுத்தத் தொடங்கினர்.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ட்விட்டரில் குவிந்ததால் ட்விட்டரும் சிறிது நேரம் ஆட்டம் கண்டது. சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப பிரச்னை தீர்க்கப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. வாட்ஸ்அப் நிறுவனம், பல பயனர்கள் வாட்ஸ்அப் தளத்தை பயன்படுத்த முடியவில்லை என்பதை அறிகிறோம். விரைவில் மீண்டும் பழைய நிலையை கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகின்றன. உங்கள் பொறுமைக்கு நன்றி என ட்வீட் செய்திருந்தது. இதையடுத்து, சுமார் ஆறரை மணி நேரத்திற்குப் பிறகு வழக்கம் போல வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் செயல்படத் தொடங்கின. பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

இந்த நிலையில், பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூருக்கு ஃபேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ மன்னிப்பு கோரியுள்ளார். அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மெசன்ஜர் செயலிகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. நெருங்கியவர்களிடம் தொடர்புகொள்ள எங்கள் சேவையை எந்த அளவுக்கு நம்பியுள்ளீர்கள் என தெரியும். இடையூறுக்கு மன்னிக்கவும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், நாங்கள் இப்போது மீண்டும் 100 சதவீதத்தில் இயங்குகிறோம். வாட்ஸ் அப்பை மீட்டெடுக்க எங்கள் குழு விடாமுயற்சியுடன் பணியாற்றியபோது உலகம் முழுவதும் பொறுமை காத்த பயனர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளது.