☰
×

நிம்மதியாக தூங்கினால்  ரூ.13 லட்சம் பரிசு!

 

ஜப்பானில் 90 நிமிடங்கள் நிம்மதியாக உறங்குபவருக்கு ரூ.13 லட்சம் பரிசுதொகை வழங்கப்பட்டுள்ளது.


ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில், ஒருவர் 90 நிமிடங்கள் தூங்க வேண்டிய ஒரு தூக்கப் போட்டி நடத்தப்பட்டது. 'மேட் ரேஸ்' என்று அழைக்கப்படும் இந்தப் போட்டி, திங்களன்று டோக்கியோவில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு 90 நிமிடங்கள் தூங்க முயற்சி செய்தனர். போட்டியாளர்களின் தூக்கத்தைக் கண்காணிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு, போட்டி முழுவதும் அவர்கள் வசதியான மெத்தைகளில் உறங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.  மிக விரைவாகவும் ஆழ்ந்தும் தூங்கியவரே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, அவருக்கு ரூ.13 லட்சம்  பரிசாக வழங்கப்பட்டது.  75 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் போட்டியாளர்களின் மூளை செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டுள்ளன. ஆழ்ந்த, நிம்மதியான உறக்கத்தின் அடிப்படையில் ஸ்கோர் கணக்கிடப்பட்டு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) 2021 ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி, 38 உறுப்பு நாடுகளில் ஜப்பானிய மக்களே மிகக் குறைவாக உறங்கினர்; அவர்களின் உறக்க நேரம் ஒரு நாளைக்குச் சராசரியாக ஏழு மணி நேரம் 24 நிமிடங்கள் ஆகும். ஜப்பானிய மக்கள் நீண்ட நேரம் வேலை செய்வதாலும், நீண்ட நேரம் பயணம் செய்வதாலும், பரபரப்பான இரவு வாழ்க்கையைச் சார்ந்திருக்கும் பொருளாதாரத்தைக் கொண்டிருப்பதாலும், அவர்கள் குறைவான மணிநேரமே உறங்குகிறார்கள். குறைவாக உறங்கினாலும், ஜப்பானிய மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வாரத்திற்கு 180 முதல் 200 மணி நேரம் வரை வேலை செய்யும், தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட நாடான ஜப்பானில் மெத்தை நிறுவனமான கோலா ஸ்லீப் இப்போட்டியை நடத்தியது குறிப்பிடதக்கது.