×

"அரச பட்டமும் வேண்டாம்; சொத்தும் வேண்டாம்" - காதலனை கரம்பிடித்தார் ஜப்பான் இளவரசி மகோ!

 

காதலுக்காக மாட மாளிகைகளையும் பெரும் பணத்தையும் விட்டுக்கொடுப்பார்கள் என நாம் பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். அதெல்லாம் அந்தக் காலம். இந்தக் காலத்தில் பணம் தான் எல்லாம். காதல் எல்லாம் சும்மா என என்பார்கள். ஆனால் அவர்களின் வாயை அடைக்கும் விதமாக அமைந்துள்ளது ஜப்பான் இளவரசியின் செயல். ஆம் காதலுக்காக தன்னுடைய அரசப் பட்டத்தையே தூக்கியெறிந்திருக்கிறார். முன்னாள் ஜப்பான் பேரசர் அகிஹிட்டோ. இவரது பேத்தி தான் இளவரசி மகோ. தற்போது ஜப்பான் பேரரசராக அகிஹிட்டோவின் மகன் நருஹிட்டோ இருக்கிறார்.

இவர் 2012ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்றார். அப்போது இவருக்கும் இவருடன் படித்த கொமுரோ என்ற இளைஞருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தனர். ஆனால் கொமுரோவோ சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். இதன் காரணமாக அரச குடும்பத்தினர் மகோவின் காதலுக்கும் திருமணத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல தங்களை மீறி திருமணம் செய்தால் அரச குடும்ப சட்டத்தின்படி, இளவரசி என்ற பட்டத்தை மகோ துறக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.

ஆனால் அரச பட்டம் போனாலும் பரவாயில்லை நான் கொமுரோவை தான் திருமணம் செய்துகொள்வேன் என பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால் வேறு வழியின்றி அவர்கள் சம்மதித்துவிட்டனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். இருப்பினும் கொமுரோவின் தாயார் தனது இரண்டாவது கணவருக்கு கடன் கொடுக்க வேண்டும் என்ற பிரச்சினையால் இருவரின் திருமணம் தள்ளிப்போனது. இதனிடையே கொமுரோ அமெரிக்கா சென்று சட்டம் பயின்றார். தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிந்து, கொமுரோ அமெரிக்காவிலிருந்து செப்டம்பர் மாதம் திரும்பி வந்தார். 

அவர் வந்த உடனே திருமண வேலைகள் மீண்டும் ஆரம்பித்தன. அரச குடும்ப சட்டத்தின்படி, இளவரசி சாதாரண நபரை திருமணம் செய்துகொண்டால் அவர் இளவரசி பட்டத்தை திரும்ப ஒப்படைப்பார். அதற்குப் பதிலீடாக அரச குடும்பம் அவருக்கு இழப்பீடு வழங்கும். அந்த வகையில் மகோவுக்கு சுமார் 10 கோடி ரூபாய் கொடுக்க அரச குடும்பம் முன்வந்தது. ஆனால் அந்த தொகையையும் வேண்டாம் என உதறி தள்ளினார் மகோ. காதலுக்காக இளவரசி பட்டத்தையும் 10 கோடியையும் தூக்கியெறிந்தது அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது. 

இச்சூழலில் இன்று இருவருக்கும் முறைப்படி சாதாரண முறையில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. தடைகளை தகர்த்தெறிந்து வெற்றிக்கரமாக காதலனின் கரம் பற்றினார் மகோ.  இன்று அதிகாலையே அரண்மனையிலிருந்து மகோ வெளியேறினார். அப்போது தனது பெற்றோர், இளவரசர் அகிஷினோ, இளவரசி கிகோ, தங்கை ககோ ஆகியோரை ஆரத்தழுவி உணர்ச்சி பொங்க பிரியாவிடை பெற்றார். சாதாரண உடை அணிந்தே மகோ அரண்மனையிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.