×

"ஷியா முஸ்லீம்கள் ஒருத்தரையும் விடாம கொலை பண்ணுவோம்" - எச்சரிக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகள்!

 

தமிழ்நாட்டை தவிர்த்து இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இஸ்லாமியர்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்ற தவறான கற்பிதம் இருந்து வருகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இஸ்லாமியர்களால் இஸ்லாமியர்களுக்கே அச்சுறுத்தல் இருக்கிறது. அவர்களில் ஒருசாரார் புரியும் குற்றச்செயலுக்காக மொத்த பேரையும் குற்றவாளி கூண்டில் ஏற்றுவது சரியல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இஸ்லாமியத்தில் சுன்னி பிரிவை முன்னெடுப்பவர்கள் தலிபான்கள். அவர்களின் ஒன்றுவிட்ட பங்காளிகள் தான் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள். இவர்களும் அதே பிரிவைச் சேர்ந்தவர்கள்.

ஐஎஸ் பயங்கரவாதிகளைப் பொறுத்தவரை ஷியா என்ற இஸ்லாமிய பிரிவினரே இருக்கக் கூடாது என்பதே. அவர்களை ஆயுதங்கள் கொண்டு கொன்றுவிட வேண்டும் என்பதையே பிரதான நோக்கமாக வைத்துள்ளனர். சிரியா, ஈராக், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வருகின்றனர். இவர்களின் மற்றொரு நோக்கம் இந்தப் பகுதிகளை ஒன்றிணைத்து மாபெரும் இஸ்லாமிய அரசை நிறுவ வேண்டும் என்பதே. இவர்கள் தலிபான்களுக்கே தலிபான்கள். மிகவும் அபாயகரமான பயங்கரவாத குழு. முந்தைய ஆப்கானிஸ்தான் அரசு இருந்தபோது அவ்வப்போது தாக்குதல் நடத்துவார்கள். சரி இப்போது தலிபான்கள் வந்துவிட்டார்களே நிறுத்துவார்களா?

அந்த எண்ணமே எழாத வகையில் அடுத்தடுத்து தாக்குதலை நிகழ்த்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் ஆப்கானில் குண்டுஸ் பகுதியில் ஷியா பிரிவினரின் மசூதி ஒன்றில் சில தற்கொலைப் படை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். அதேபோல கந்தஹார் பகுதியில் ஷியா மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 60க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த இரு தாக்குதல்களுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் ஐஎஸ் அமைப்பினரே தான். ஆனால் ஆட்சியில் அமர்ந்துபோது தலிபான்கள், இவர்களை வேரோடு பிடுங்கி எறிவோம் என்றனர். பிடுங்கி எறியும் லட்சணம் இதுதான் போல. 

தலிபான்களுக்கும் ஷியா பிரிவினரை கண்டால் ஆகாது. ஆகவே அவர்களுக்கும் தொடர்புண்டோ என்ற எண்ணம் எழாமல் இல்லை. இந்நிலையில், ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக அறிக்கை ஒன்றை ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் எங்கிருந்தாலும் குறிவைத்து கொல்லப்படுவார்கள். அவர்கள் இல்லங்கள், அவர் நடத்தும் மையங்கள், மசூதிகள் என அனைத்து இடங்களும் குறிவைக்கப்படும். குறிப்பாக ஆப்கானிஸ்தானிலுள்ள ஷியா இஸ்லாமியர்கள் டார்கெட் செய்யப்படுவார்கள். ஈராக் தலைநகர் பாக்தாத் முதல் ஈரானிலுள்ள கோராசான் வரை இந்தத் தாக்குதல் தொடரும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.