×

ஈரான், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கவும் - இந்திய தூதரகம் அறிவுறுத்தல்.. 

 

ஈரான், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.  

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 2023ம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தலைமையிடமாகக் கொண்டு ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வந்ததால், இஸ்ரேல் காசாவை மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியது. முற்றிலுமாக உருக்குலைந்து போயுள்ள காசாவில், தற்போது குடிநீரும், உணவுமின்றி பட்டினியால் மக்கள் நாள்தோறும் செத்து மடிகின்றனர்.  

இதனிடையே ஹமாஸ் அமைப்புக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும்,  லெபனானின் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் , ஈரானும் ஆதரவு தெரிவித்து வந்தன.  இந்த நிலையில், கடந்த ஆண்டு  ஜூலை 31ம் தேதி ஈரானில் புதிய அதிபர்  பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக,  சென்றிருந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார்.  

இந்த தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் - ஈரான் இடையேவும் கடுமையான போர் நிகழ்ந்து வருகிறது. அந்தவகையில் தற்போது  ஈரானின் இதயமாக கருதப்படும் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், ஈரான் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

ஈரானும் பதில் தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுவதால்,  ஈரான் மற்றும்  இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரான் நாட்டுக்கான இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பாக இருக்கவும் தேவையற்ற நடமாட்டத்தை தவிர்க்கவும் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.