×

"1 மாதமே டைம்... தடுப்பூசி செலுத்தாவிட்டால் டிஸ்மிஸ் தான்" - ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த கூகுள்!

 

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி உள்நாட்டு பாஸ்போர்ட்டாகவே மாறிவிட்டது. எங்கு சென்றாலும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இருக்கிறதா என்றே கேட்கிறார்கள். பெரும்பாலான நாடுகளில் பொதுவெளியில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் கூட தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும். அதேபோல பெரு நிறுவனங்களும் ஊழியர்களை தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்தி வருகின்றன. தடுப்பூசி செலுத்தினால் தான் அலுவலகத்துக்குள்ளேயே அனுமதிக்கிறார்கள். 

அந்தளவிற்கு தடுப்பூசி அத்தியாவசியங்களில் ஒன்றாக அங்கமாகிவிட்டது. இதனைக் கருத்தில் கொண்டு ஏராளமானோர் பூஸ்டர் எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியையும் சேர்த்து போட்டுவிட்டார்கள். ஆனால் ஒருசிலர் தடுப்பூசி மீதான பயத்தாலும், அலட்சியத்தாலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. அதேபோல மத நம்பிக்கைகளும் குறுக்கே நிற்கின்றன. அவர்களை அவ்வப்போது நிறுவனங்கள் எச்சரித்து வருகின்றன. வேலையை விட்டு நீக்குவது, சம்பளத்தைக் குறைப்பது போன்ற அஸ்திரங்களைக் கையிலெடுத்துள்ளன. 

தற்போது உலகளவில் பிரபலமான கூகுள் நிறுவனமும் இந்த அஸ்திரத்தை பிரயோகித்துள்ளது. ஆம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களை வேலையை விட்டு நீக்க முடிவு செய்தது. ஒருவேளை தடுப்பூசி போட்டுக்கொண்டால் வேறு எதாவது மோசமான பக்கவிளைவுகள் ஏற்படும் என்று சொன்னால் அதற்குரிய மருத்துவரின் ஒப்புதலை அவர்கள் சமர்பிக்க வேண்டும். டிசம்பர் 3ஆம் தேதி வரை கூகுள் ஊழியர்களுக்கு கெடு விதித்திருந்தது. தற்போது ஜனவரி 13ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த அவகாசத்திலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்ட்டால் 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய நிர்வாக விடுப்பில் அனுப்பிவைக்கப்படுவார்கள். அதற்கும் அவர்கள் இணங்கவில்லை என்றால் அடுத்த ஆறு மாதங்கள் வரை ஊதியம் இல்லாமல் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். இதிலும் அவர்கள் உடன்படவில்லை என்றால் இறுதியாக நிரந்தரமாக அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.