சட்டவிரோதமாக செயல்பட்ட கூகுள்.. லெப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்..
ஆன்லைன் தேடலில் 90 சதவீதத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைக்க கூகுள் நிறுவனம் சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளதாக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கூகுள் தேடுபொறியானது போட்டிகளை தடுக்கவும், ஆன்லைன் தேடலை தனது கட்டுப்பாடில் வைக்கவும் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கடந்த 2020ம் ஆண்டு கூகுள் நிறுவனம் மீது அமெரிக்க நீதித்திறை வழக்கு தொடர்ந்தது. ஒரு பெரும் தொழில்நுட்ப நிறுவனம் மீது தொடரப்பட்ட வழக்குகளில் இதுவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அண்மையில் அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அமெரிக்க நீதிபதி அமித் மேத்தா 277 பக்கம் கொண்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அதில், தொழில் போட்டிகளை தடுக்கவும், ஏகபோக உரிமைகளை பேணவும் கூகுள் நிறுவனம் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் தேடுதல் சேவையில் ப்ரவுசரில் 90 சதவீதத்தையும், மொபைல்களில் 94.9 சதவீதத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்மார்ட் போன்களிலும், பிரவுசர்களிலும் தனது தேடுபொறி, டீபால்ட்டாக ( Default) நிறுவப்படுவதற்கு கோடிக்கணக்கான ரூபாய்களை கொடுத்திருப்பதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை அமெரிக்க நீதித்துறையை சேர்ந்தவர்கள் பெரும் வெற்றியாக கொண்டாடி வருகின்றனர். அமெரிக்க மக்களுக்கு இது ஒரு வரலாற்று வெற்றி என்றும், எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் சட்டத்திற்கு மேலானது இல்லை எனவும் அமெரிக்க அரசு வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லண்ட் தெரிவித்திருக்கிறார்.
அதேநேரம் இந்த தீர்ப்பு கூகுள் மற்றும் அதன் தலைமை நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் நிறுவனம் மீதான இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஆல்பாபெட் நிறுவனம் அறிவித்திருக்கிறது.