×

மீண்டும் உச்சத்தில் கொரோனா : மீண்டும் முழு ஊரடங்கு அமல்?

 

ஜெர்மனியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஜெர்மனி அரசு ஆலோசித்து வருகிறது.

உலகையே ஆட்டிப்படைத்த நோய் தொற்று என்றால் அது கொரோனா வைரஸ் தான். கொரோனா நோய் தொற்றினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதுடன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாகவும்  உயிரிழந்தனர்.  கொரோனா வைரஸ் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை ஒவ்வொரு நாடும்,  அறிந்துகொள்ளும் முன்னரே உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருந்தது.  இந்த சூழலில் பல நாடுகள்கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடித்து அவற்றை நடைமுறைப்படுத்தின. 

கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு என்பது மிகப் பெரியது.  அதனால்தான் பல நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றை பேரிடராக அறிவித்தது. இந்த சூழலில் ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஜெர்மனி நாட்டில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில்,  கடந்த சில மாதங்களாக அவற்றின் வீரியம் குறைந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 66 ஆயிரத்து 884 பேர் தொற்றால்  பாதிக்கப்படுள்ளனர். இதனால் மீண்டும் ஜெர்மனியில் முழு ஊரடங்கு அமல்படுத்தலாமா? என அந்நாட்டு அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இருப்பினும் முதற்கட்ட நடவடிக்கையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு,  3ஜி விதிமுறையை ஜெர்மனி அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது , தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் ,நோய் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் , தொற்று இல்லை என்று சோதனை செய்து சான்றிதழ் வைத்துள்ளவர்கள் மட்டுமே அலுவலகம் மற்றும் பொது போக்குவரத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அந்நாட்டின் மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சை பிரிவுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது.  இதில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.  மக்கள் தொகையில் 68 சதவீதம் பேர் தான் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்றும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது . அத்துடன் ஜெர்மனியில் வேகமாக தொற்று பரவல்  இருப்பதால்  மருத்துவ பணியாளர்களுக்கு இது கூடுதல் மனஅழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் விரைவில் ஜெர்மனியில் முழு ஊரடங்கு  அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.