×

தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் - மக்கள் வீதிகளில் தஞ்சம்

 

தஜிகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 

கடந்த சில நாட்களாக உலகநாடுகளில் அதிபயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த 06ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவின் எல்லையில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தால் சுமார் 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். இதேபோல் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்,  தஜிகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஜிகிஸ்தானின் முர்கோப் நகருக்கு மேற்கே 67 கிலோமீட்டர் தொலைவில், 20 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:37 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் உயிர்சேதங்கம் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.