×

குடும்பத்தோடு எஸ்கேப்பான கனட பிரதமர் ட்ரூடோ.. கொந்தளிக்கும் லாரி ஓட்டுநர்கள் - காரணம் என்ன? 

 

உலகம் முழுவதும் ஒமைக்ரான் கொரோனா பரவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அபாயகரமான டெல்டா கொரோனாவை விட ஆபத்தான வைரஸாக ஒமைக்ரானை உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது. டெல்டாவைக் காட்டிலும் 5 மடங்கு வேகமாகப் பரவக் கூடியது என்றும் குறிப்பாக இரண்டு டோஸ் போட்டுக்கொண்டாலும் ஒமைக்ரான் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒமைக்ரான் கொரோனா தடுப்பூசியின் முக்கியவத்துவத்தை உணர்த்தியுள்ளது. 

குறிப்பாக பூஸ்டர் டோஸின் அவசியத்தையும் உரைக்க வைத்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன்பை விட தடுப்பூசி செலுத்தும் வேகத்தை விரைவுப்படுத்தியுள்ளன. அதேபோல தடுப்பூசியைக் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளன. பொது இடங்களில் உலவக் கூட தடுப்பூசி அவசியம் என ஆணையிட்டுள்ளன. அந்த வகையில் கனடா நாட்டிலும் இதேபோன்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அங்கே கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்கியிருப்பதால் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதேபோல லாரி ஓட்டுநர்கள் ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணம் செல்லவும், அமெரிக்க எல்லையைக் கடக்கவும் கட்டாயம் இரண்டு டோஸ் வேக்சின் போட வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளார். இரண்டு டோஸ் செலுத்திக்கொள்ளாத ஓட்டுநர்கள் லாரிகளை இயக்க முடியாது எனவும் கூறியுள்ளார். இதுதான் அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. லாரி ஓட்டுநர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பல்வேறு இடங்களில் போராட்டங்களையும் அமைதிப் பேரணிகளையும் முன்னெடுத்து வருகின்றனர். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிராக கடுமையாக கோஷம் எழுப்பி வருகிறார்கள். 

50 ஆயிரத்திற்கும் அதிகமான லாரிகள் தலைநகர் ஒட்டவாவை முற்றுகையிட்டுள்ளன. மேலும் போராட்டக்காரர்கள் அனைவரும் பிரதமர் அலுவலகத்தையும் முற்றுகையிடப் போவதாக கூறியுள்ளனர். இதனால் பெரிய வன்முறை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பாதுகாப்புக்கும் ஆபத்து உண்டாகியுள்ளது. இதன் காரணமாக ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தோடு ரகசிய இடம் ஒன்றில் தலைமறைவாகியுள்ளார். தலைநகரிலிருந்து வெளியேறி வேறு ஒரு மாகாணத்தில் அவர் தங்கியிருக்கிறார். ஆனால் அவரின் இருப்பிடம் குறித்த தகவல் வெளியாகவில்லை.