×

100 கண்ணிவெடியை தட்டித்தூக்கிய கம்போடியாவின் "ஹீரோ" மகாவா எலி மறைந்தது - கதறும் மக்கள்! 
 

 

இந்திய மக்கள் எலிகளை எப்படி ட்ரீட் செய்வார்கள் என்பது அனைவருக்குமே தெரியும். எலியை கொல்வதற்காக டைப் டைப்பாக வழிமுறைகளைக் கண்டுபிடித்து வைத்துள்ளனர். கூண்டை வைத்து பிடிப்பது, எலி கேக் எனும் விஷத்தை வைப்பது என பல டெக்னிக்குகளை கையில் வைத்துள்ளனர். ஆனால் எலிகளின் முக்கியவத்துவம் அளப்பறியது. ஒரு மருந்தையோ தடுப்பூசியையோ மக்களுக்குச் செலுத்தும் முன்பு எலிகளை வைத்து தான் ஆராய்ச்சியாளர்கள் பரிசோதிப்பார்கள். லிட்டில் பிரின்ஸ்கள் செய்யும் டிஷ்களுக்கு அப்பாக்கள் எப்படியோ அப்படி தான் எலிகளும்.

அதேபோல கம்போடியாவில் வேறொரு பயன்பாட்டிற்கும் எலிகளைப் பயன்படுத்துகின்றனர். ஆம் கண்ணிவெடிகளைக் கண்டிபிடிக்க எலிகளுக்கு பயிற்சி கொடுக்கின்றனர். அதில் ஒரு கில்லாடி எலி தான் மகாவா. அந்த எலி இதுவரை 100 கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து கொடுத்திருக்கிறது. மகாவா எலி ஆப்பிரிக்காவின் டான்சானியா நாட்டில் பிறந்தது. அங்கு வளர்க்கப்பட்டு, பின் அங்கிருந்து கம்போடியாவுக்கு அழைத்துவரப்பட்டது. கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் பணிக்காகவே மகாவாவுக்கு பிரத்யேகமாக பயிற்சி வழங்கப்பட்டது.

கண்ணிவெடிகளை அடையாளம் கண்டுபிடிக்கும் பயிற்சியை எலிகளுக்கு கம்போடியாவிலுள்ள அபோபா என்ற தொண்டு நிறுவனம் வழங்கி வருகிறது. எலிகள் மோப்ப சக்தி மூலம் கண்ணிவெடிகளை அடையாளம் காண்கின்றன. தனக்கு வழங்கப்பட்ட பயிற்சிக்கேற்ப மூளை திறனைக் கொண்டு மிகச் சிறப்பாக கண்ணிவெடிகளை கண்டுபிடித்து கம்போடியா நாட்டு அரசின் ஏகபோக பாராட்டைப் பெற்றது. மகாவா எலி 100க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அசத்தியது. சமீபத்தில் தான் பணியிலிருந்து ஓய்வு பெற்றது.

மகாவாவின் திறமையான பணியை அங்கீகரிக்கும் விதமாக இங்கிலாந்து விலங்குகள் நல அமைப்பு, எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவப்படுத்தியது. கடந்த 77 ஆண்டுகால வரலாற்றில் எலி ஒன்றுக்கு அந்த அமைப்பு தங்கப்பதக்கம் பெற்றது இதுவே முதன்முறையாகும். இவ்வாறு பல்வேறு சொந்தக்காரரான அந்த எலி உயிரிழந்துவிட்டது. கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவால் இருந்த மகாவா தன்னுடைய 8 வயதில் நேற்று உயிரிழந்தது. இந்தச் செய்தி கம்போடி மக்களின் தலையில் இடியாய் இறங்கியிருக்கிறது. அனைவரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மகாவா மறைவு குறித்து அதனை பயிற்றுவித்த அபோபா தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "அபோபாவில் அனைவருமே மகாவா இழப்பால் வாடுகிறோம். அதன் சேவைக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம். மகாவா வியத்தகு பணியை செய்து சென்றுள்ளது. மகாவாவின் வியக்கவைக்கும் மோப்ப சக்தி கம்போடிய மக்கள் நிம்மதியாக, கை, கால் இழக்கும் அச்சமின்றி வேலை செய்ய, விளையாட வழிவகை செய்துள்ளது" என இழப்பை தாங்க முடியாமல் வார்த்தைகளில் கண்ணீர் வடித்துள்ளது.