×

வங்கதேசத்தில் உச்சகட்ட பதற்றம் : முன்னாள் கிரிக்கெட் வீரரின் வீட்டை கொளுத்திய போராட்டக்காரர்கள்.. 

 


வங்க தேசத்தில்  கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான மோர்தாசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். 

வங்கதேசத்தில் அரசு வேலைகளில் சுதந்திர போராட்ட தியாகிகளின்  வாரிசுகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்கிற அரசின் அறிவிப்பை எதிர்த்து மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் மீது  ஆளும் கட்சியினர் தாக்குதல் நடத்தியதால் அங்கு கலவரம் மூண்டதோடு,  பல இடங்களில் வன்முறை வெடித்தது. வங்கதேசத்தில் ஏற்பட்ட இந்த  வன்முறையால் காவலர்கள், மாணவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக  இடஒதுக்கீட்டு சலுகையை 5% ஆக குறைத்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  

இருந்தபோதிலும் பிரமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரியும்,  போராட்டத்தில் கைது செய்யபட்டவர்களை விடுவிக்கக்கோரியும் மீண்டும் கடந்த ஞாயிறு முதல் மீண்டும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில்ஈடுபட்டு வருகின்றன. நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் பலனில்லை.  வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள அமைச்சர்களின் வீடுகள் மற்றும் பிரதமர் அலுவலகங்களை சூரையாடிய போரட்டக்காரர்கள்,  அத்துடன் வங்க தேசத்தின் தந்தை என்றழைக்கப்படுபவரும், ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜ்பூர் ரஹ்மானின் சிலையையும் உடைத்து தள்ளினர். இதனால் நாடு முழுவதும் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. 

இதனால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தப்பி வந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.  இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முர்தபா மோர்தசாவின்(Mashrafe mortaza) வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். இவர் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான பங்களாதேஷ் அவமி லீக் சார்பில் போட்டியிட்டு தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அத்துடன் கட்சியின் கொறடாவாகவும் செயல்பட்டு வந்துள்ளார்.  இந்தச் சூழலில் மோர்தாசாவின் வீட்டுக்குள் சென்ற போரட்டக்காரர்கல் அங்குள்ள பொருட்களை தீவைத்து கொளுத்தியுள்ளனர். இந்த  சம்பவம் அங்கு நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.