×

"தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் முழு ஊரடங்கு" - அரசின் மாஸ்டர் பிளான்!

 

இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது ஓய்ந்துள்ளது. புயலுக்கு முன் பேரமைதி நிலவுவது போல கொரோனாவின் கொட்டம் முற்றிலுமாக அடங்கியுள்ளது. ஆனால் பிரிட்டன், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிலும் ஐரோப்பா கண்டத்திலுள்ள பெரும்பாலான நாடுகளிலும் கொரோனா புயல் மையம் கொண்டுள்ளது. குறிப்பாக ஆஸ்திரியா நாட்டில்தான் மிக அதிகளவில் தொற்று பரவல் விகிதம் உள்ளது. கடந்த ஒரு வாரமாக 1 லட்சத்திற்கு 815 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். 

இதனால் மீண்டும் ஊரடங்கை பிறப்பிக்க ஆஸ்திரியா போன்ற ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன. முதல் நாடாக ஆஸ்திரியா முழு ஊரடங்கை பிறப்பித்தும்விட்டது. ஆனால் மிகப்பெரிய கண்டிஷன் போட்டிருக்கிறது. தடுப்பூசி போட்டவர்கள், போடாதவர்கள் என இரு பிரிவாகப் பிரித்து முழு ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிறது. தடுப்பூசி செலுத்தியவர்கள் தடுப்பூசி சான்றிதழைப் பயன்படுத்தி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எங்கேயும் பயணம் செய்ய முடியும். அவர்களுக்கூ 100% அனுமதி உண்டு.

ஆனால் தடுப்பூசி செலுத்தாதவர்கள் வேலை, அத்தியாவசிய பொருட்களை வாங்க, மருத்துவமனை, பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் செல்ல முடியும். இவை தவிர தியேட்டர், கிளப், சுற்றுலா தளம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல அனுமதி கிடையாது. இதனை மீறி தடுப்பூசி செலுத்தாமல் யார் சென்றாலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தடுப்பூசி செலுத்தாதவர்களை அனுமதித்தால் அந்த தியேட்டர்கள், நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என அரசு கூறியுள்ளது.

ஆஸ்திரியாவில் 65 சதவீதம் பேர் மட்டுமே முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசிகளைச் செலுத்தியுள்ளனர். மீதமுள்ளவர்கள் ஒரு டோஸ் கூட செலுத்தாமல் ஜாலியாக சுற்றித்திரிகிறார்கள். அவர்கள் மூலமாகவே கொரோனாவும் அதிகளவில் பரவி வருகிறது. அதிகளவில் உயிரிழப்பவர்களும் அவர்கள்தான். ஆகவே தான் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது ஆஸ்திரிய அரசு. 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால், அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.