×

மியான்மர் ராணுவத்தின் அடங்காத வெறி... ஆங் சான் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை!

 

ராணுவத்தால் சீரழிந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் அண்டை நாடான பர்மா எனும் மியான்மருக்கு இடமுண்டு. பிரிட்டிஷின் காலணி நாடுகளில் இதுவும் ஒன்று. 1948ஆம் ஆண்டில் அவர்களிடம் விடுதலை பெற்றாலும், ராணுவத்திடமிருந்து அந்நாட்டு மக்கள் விடுதலை பெற முடியவில்லை. அப்படியான நாட்டில் தான் ஜனநாயகத்தை வளர்த்தெடுக்க விரும்பினார் ஆங் சான் சூகி. 90-களில் அஹிம்சை போராட்டங்களை முன்னெடுத்து மக்களின் மனநிலையையும் மாற்றிக் காட்டினார். 

1990 பொதுத் தேர்தலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர் கட்சி மாபெரும் வெற்றி கண்டது. இருப்பினும் அவர் ஆட்சியை ராணுவம் அனுமதிக்கவில்லை. 2011-2015 ஆண்டுகலில் மியான்மர் நாட்டில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட தொடங்கின. 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. இருப்பினும் இராணுவத்தினர் ஆட்சியில் முக்கியமான துறைகளை தங்கள் வசம் எடுத்துக் கொண்டனர். ஆங் சான் சூகி மியான்மர் அரசின் தலைமை ஆலோசகராக மட்டும் பதவியில் இருந்தார்.

இச்சூழலில் அவர் சார்ந்த கட்சி முறைகேட்டில் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்றியதாக ராணுவம் குற்றஞ்சாட்டியது. அதோடு நில்லாமல் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி அவர் தலைமையிலான அரசையும் கவிழ்த்தது. அதற்கு ராணுவ புரட்சி என்றும் பெயரிட்டுக் கொண்டது. இதற்கு எதிராக மியான்மர் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. ஆனால் ராணுவம் இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. அதேபோல ஆங் சான் சூகி, எம்பிக்கள் என பலர் வீட்டு காவலில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து தேர்தலின்போது சட்ட விரோதமாக வாக்கிடாக்கி வாங்கியது, தேசத்துரோகம், சட்டத்தை மீறியது, சட்ட விரோதமாக தங்கம் பெற்றது, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாமல் பிரச்சாரம் செய்தது என பல வழக்குகளை ராணுவ அரசு தொடுத்தது. இதுதொடர்பான வழக்குகள் மியான்மர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் கொரோனா விதிமுறைகளை மீறியது தொடர்பான வழக்கில் கடந்த டிசம்பரில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 

தற்போது வாக்கிடாக்கி வழக்கில் மேலும் 4 ஆண்டுகள் தண்டனை வழங்கி மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்சான் சூகி 1989ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டு வரை சுமார் 21 ஆண்டுகள் சிறையிலும் வீட்டுக் காவலிலுமே கழித்தார். இதற்காக 1991ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றார்.