130 பேர் பலி.. வங்கதேச போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த நீதிமன்றம்..
வங்கதேச வேலைவாய்ப்புகளில் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இடஒதுக்கீடு ரத்து செய்தது அந்நாட்டு உச்சநீதிமன்றம்.
அண்டை நாடான வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதனால் ஏற்பட்ட மோதலில் நாடு பெரும் வன்முறை வெடித்தது. அரசு தொலைக்காட்சி நிலையம் தீக்கிறையாக்கப்பட்டது. அத்துடன் தலைநகர் டாக்காவின் வடக்கே அமைந்திருந்த சிறைச்சாலைக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் சுமார் 800 கைதிகள் தப்பியோடினர்.
இவ்வாறாக இருதரப்பினரிடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமாக, வன்முறை கட்டுக்கடங்காமல் போனது. இதனால் நாடு முழுவடும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, ராணுவமும் களமிறக்கப்பட்டது. ஆனாலும் வன்முறையை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர் வன்முறையால் இதுவரை 130 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டும் நிலைமையை சரி செய்ய முடியாததால் ஊரடங்கை மீறி வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட வங்கதேச அரசு உத்தரவிட்டது.
வங்கதேசத்தில் நிலவிய அசாதாரண சூழலால் அங்கு சிக்கியிருந்த இந்திய மாணவர்கள் 1000 பேர் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வரப்பட்டனர். மேலும் அங்கு சிக்கியுள்ள மாணவர்கள் தாங்கள் தாயகம் திரும்ப உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குளேயே இருக்க வேண்டும் எனவும், அனைவரையும் பாதுகாப்பாக அழைத்துவர வெளியுறவுத் துறை அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், வங்கதேச வேலைவாய்ப்புகளில் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இடஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், இந்த போராட்டம் மற்றும் வன்முறைகளால் 130பேர் உயிரிழந்துள்ளதாகவும், மாணவர்கள் உடனடியாக போராட்டத்தைக் கைவிடுமாறும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.