×

"பேச்சுவார்த்தைக்கு தயார்.. ஆனா அங்க மட்டும் வேண்டாம்" - கடுப்பாகிய ஜெலன்ஸ்கி!

 

உலகமே அச்சத்தில் எதிர்பார்த்திருந்த போர் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டார். அதன்படி இன்று வரை போர் தொய்வின்றி நடத்தப்படுகிறது. ரஷ்ய படைகள் விடிய விடிய தாக்குதலை நிகழ்த்தி வருகின்றன. இந்த தாக்குதலில் உக்ரைனில் வசிக்கும் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. 2 ஆயிரக்கணக்கான வீரர்களும் உக்ரைன் ராணுவத்துக்குச் சொந்தமான மையங்கள், பீரங்கிகள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என பலவற்றையும் ரஷ்யா வீழ்த்தியுள்ளது.

உக்ரைனும் பதிலடி கொடுக்கும் விதமாக இதுவரை 3,500 ரஷ்ய வீரர்களைக் கொன்றுவிட்டதாகவும் 200க்கும் மேற்பட்ட வீரர்களைக் கைதிகளாக சிறையில் அடைத்திருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதேபோல ரஷ்யாவின் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள். ராணுவ வாகனங்கள், பீரங்கிகளை அழித்துவிட்டதாகவும் கூறியுள்ளது. இவ்வாறு இரு தரப்புக்கும் சேதம் அதிகம் தான். எனினும் உக்ரைனின் 5 முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றிவிட்டது. குறிப்பாக தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கவ்வை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது.

இதனிடையே இரண்டாம் நாளில் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்யா அறிவித்தது. பேச்சுவார்த்தைக் குழு தயாராக இருப்பதாகவும் கூறியது. அதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஒப்புக்கொண்டார். அதன்படி பேச்சுவார்த்தைக்கு தகுந்த இடம் குறித்து இரு நாடுகளும் பரிசீலித்து வந்தன.இரு நாடுகளுக்கும் அண்டை நாடான பெலாரஸ்ஸின்  ஹோமெல் நகரில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என ரஷ்யா யோசனை தெரிவித்தது. உக்ரைனோ தனக்கு ஆதரவான போலந்தில் நடத்திக்கொள்ளலாம் எனவும் தொடர்ச்சியாகக் கூறி வருகிறது.

இச்சூழலில் பெலாரஸ்ஸில் வேண்டாம்; அங்கு நடத்த உடன்பாடில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைனை தாக்க பெலாரஸ் வழியாக தான் வந்தது. அவ்வாறு உடந்தையாக செயல்பட்டு அனுமதித்த நாட்டில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை என்றும் போலந்தின் வார்ஸா, துருக்கியின் இஸ்தான்புல், ஹங்கேரியின் புடாபெஸ்ட், அல்லது பாக்கூ, பிராடிஸ்லாவா போன்ற நகரங்களில் பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ஏற்கெனவே ரஷ்யாவின் ராணுவ மற்றும் தூதரக அதிகாரிகளை உள்ளடக்கிய குழு ஹோமெல் நகரில்  முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.