×

உக்ரைனில் தெறிக்கும் ரத்தம்.. கொத்து கொத்தாக வீரர்களின் பிணங்கள் - ரஷ்யா அட்டூழியம்!

 

ரஷ்யா நிச்சயம் உக்ரைன் மீது போர் தொடுக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்று தான். அதற்கான அச்சாரத்தை அது எப்போதோ போட்டுவிட்டது. ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் தாக்குதலை நிகழ்த்தியிருப்பது தான் சற்று ஆச்சரியமாக உள்ளது. ரஷ்ய அதிபர் புடினுக்கு உள்நாட்டுக்குள் எழுந்த அரசியல் நெருக்கடியும் ஒரு காரணமாக இருக்கலாம். அதேபோல கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார சரிவு, வேலைவாய்ப்பின்மை, அமைதியின்மை போன்றவையும் கூடுதல் காரணிகளாக உள்ளன. 

செல்வாக்கை உயர்த்திக்கொள்ள உக்ரைனை கைப்பற்றுவதே தவிர வேறு வழி அவருக்கு இருக்கவில்லை என்பதைத் தான் இந்த போர் முடிவு உணர்த்துகிறது. அவரின் 22 ஆண்டுகால ஆட்சி மக்களுக்கு அலுத்துவிட்டபடியாலும் அதிபர் பொறுப்பை விட மனமில்லாமலும் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளைத் தொடுத்திருக்கிறார். அதற்கு வலுவான காரணமாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைந்துள்ளது. உக்ரைனை பொறுத்தவரை அது ஐரோப்பிய கலாச்சாரத்தின் பால் மோகம் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பக்கம் சாய்கிறது. ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுக்கு நெருக்கமானவை.

ஆகவே உக்ரைன் மொத்தமாக சாய்ந்துவிட்டால் ரஷ்யாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதையே அவர் காரணமாக கூறுகிறார். வேறு வழியில்லாமல் அமைதியை நிலைநாட்டவே இத்தகைய நடவடிக்கை என்கிறார் புடின். ஆனால் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மிகக் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என புடினை எச்சரித்துள்ளன. இருந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் எவன் குறுக்க வந்தாலும் பேரழிவு நிச்சயம் என ராணுவத்தைக் களமிறக்கி விட்டிருக்கிறார் புடின். இதனையடுத்து உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்யாவின் குண்டுமழை பொழிந்து வருகிறது. 

குறிப்பாக உக்ரைனின் ராணுவ தலைமையகத்தைக் கட்டம் கட்டி ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தியது. இவ்வாறு வரிசையாக உக்ரைன் ராணுவ மையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இடங்களாகப் பார்த்து தாக்குதல் நிகழ்த்தி வருகின்றன. இதனை எதிர்த்து உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை ரஷ்யாவின் 5 போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. அதேபோல ரஷ்யா தாக்குதலில் தங்களது நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தகவல் கூறியுள்ளது.