×

ரஷ்யாவுக்கு எதிராக உளகளவில் வீதியில் இறங்கி போராடுங்கள் - உக்ரைன் அதிபர்

 

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் உலக மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை 29-வது நாளை எட்டியுள்ளது. ரஷ்யாவின் கொடூர தாக்குதலால் உக்ரைனில் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.  இதுவரை மூன்று மில்லியன் மக்கள் உயிருக்கு பயந்து உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. போரை நிறுத்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும்,  உலக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தும் ரஷ்யா போரை நிறுத்த மறுத்து வருகிறது. ரஷ்யாவிற்கு எதிரான ஐ.நா. மற்றும் சர்வதேச நீதிமன்றத்தை உக்ரைன் நாடிய நிலையில், அது பயனற்றதாகவே உள்ளது.

இந்நிலையில்,  ரஷ்யாவுக்கு எதிராக உலகளவில் மக்கள் வீதியில் இறங்கி போராடுமாறு அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய ஜெலென்ஸ்கி, உக்ரைனுக்காகவும், உக்ரைனின் சுதந்திரத்திற்காகவும் உலக நாடுகளின் அனைத்து மக்களும் வீதியில் இறங்கி போராடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.  இதன் மூலம் உலக நாடுகள் உக்ரைன் பக்கம் இருப்பதை ரஷ்யாவுக்கு உணர்த்த வேண்டும் எனவும், பள்ளிகள், கல்லூரிகள், வீடுகள், அலுவலகங்களில் இருந்து வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும் எனவும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.