×

"ரஷ்யா நாளை போர் தொடுக்கலாம்".. எச்சரிக்கும் உக்ரைன் அதிபர் - மக்களிடம் உருக்கமான உரை!

 

உலகமே கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அமெரிக்காவும் ரஷ்யாவும் உக்ரைன் விவகாரத்தில் மிகக் கடுமையாக மோதிக் கொண்டிருக்கின்றன. உலகில் எந்த இரு நாட்டுக்குள் பிரச்சினை நிலவினாலும் அதன் பின்னால் இருந்து இயக்கும் இயக்குநர்கள் இந்த இரு நாடுகள் தான். அமெரிக்கா யாரையெல்லாம் ஆதரிக்கிறதோ அவர்களை ரஷ்யா எதிர்க்கும். அமெரிக்காவும் அப்படி தான். ஆனால் அவர்களின் நோக்கம் ஒன்று தான். சிறிய நாட்டை காலனியாக்கி வளங்களைச் சுரண்ட வேண்டும்.

அப்படியாக தான் உக்ரைனை அடைய துடிக்கிறது ரஷ்யா. ஒன்றுபட்ட சோவியத் யூனியனில் ரஷ்யாவும் உக்ரைனும் இருந்தன. பின்னர் சோவியத் யூனியனும் உடைந்தது. நாடுகளும் பிரிந்தன. அந்த வகையில் 1991ஆம் ஆண்டு உக்ரைனும் தனி நாடாக பிரிந்தது. தனக்கென தனி அரசியலமைப்பு கொள்கைகளை உருவாக்கியது. ஆனால் இதனை ரஷ்யா ரசிக்கவில்லை. மீண்டும் சோவியத் யூனியனை அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக உக்ரைனை தன்னுடன் இணைக்க போராடுகிறது. ஆனால் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இதற்கு எதிராக நின்றன. 

ஆகவே மறைமுக எதிர்ப்பு கொடுக்க ரஷ்யா திட்டம் தீட்டியது. அதன்படி தனக்கு தோதான தலைவரை அதிபராக்கி உக்ரைனில் பொம்மை அரசாங்கத்தை தோற்றுவித்தது ரஷ்யா. ஆனால் அதற்கும் வேட்டு வைத்தார்கள் உக்ரைனியர்கள். ரஷ்யாவுக்கு ஆதராவன அதிபர் 2014ஆம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்குப் பின்னர் உக்ரைனின் கைகள் ஓங்கின. இப்போது உக்ரைன் நேட்டோ எனப்படும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய ஆர்வமாக இருக்கிறது. இது ரஷ்யாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

இதனால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க போவதாகவும் தகவல் வெளியானது. அதற்கு முன்னேற்பாடாக ரஷ்யா தனது லட்சக்கணக்கான துருப்புகளை உக்ரைன் எல்லையில் நிலைநிறுத்தியது. உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகளும் களமிறங்கின. பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடந்தும் முடிவு எட்டப்படவில்லை. எந்நேரமும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில், "ரஷ்யா நாளை நம் நாட்டின் மீது போர் தொடுக்கலாம். நம் எல்லையில் ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கி நம்மை அச்சமூட்டுகிறார்கள். ஆகவே இச்சமயம் நாம் அனைவரும் ஒற்றுமை பாராட்ட வேண்டும். மக்கள் எல்லோரும் உக்ரைன் தேசியக்கொடியைப் பறக்கவிட்டு தேசியகீதத்தை பாடுங்கள். நம் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக் காட்டுங்கள்” என்றார். ரஷ்யா 1 லட்சத்திற்கும் மேலான படை வீரர்களை எல்லையில் நிறுத்தியுள்ளதாகவும் ராணுவ பயிற்சி மேற்கொள்வதாகவும் தகவல் வெளிவந்ததையடுத்து ஜெலென்ஸ்கியின் உரை முக்கியத்துவம் பெறுகிறது,