உக்ரைன் தலைநகர் கிவ்வில் மக்களுடன் உரையாற்றிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தலைநகர் கிவ்வில் உக்ரைன் அதிபருடன் சேர்ந்து மக்களோடு உரையாற்றினார்.
நேட்டோ அமைப்பில் இணைய முயற்சித்தது, மேற்கத்திய நாடுகளுடன் நட்புறவு வைத்தது உள்ளிட்ட உக்ரைனின் நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி தொடங்கிய போர் 6 வாரங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இரு நாட்டுக்கும் இடையே போர் நீடித்து வரும் சுழலில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்தியதால், ரஷ்ய படைகள் பல்வேறு நகரங்களில் இருந்து பின்வாங்கியுள்ளன. ஆனால் ரஷ்யா நடத்திய தாக்குதலில் பல்வேறு நகரங்கள் உருகுலைந்து போயுள்ளன.
குறிப்பாக கீவ் புறநகர் பகுதியான புச்சா நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். கை, கால்களை கட்டி துப்பாக்கியால் சுட்டும், பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டும் கொடூரமாக கொல்லப்பட்டு உடல்கள் சாலைகளிலும், குப்பைத்தொட்டிகளிலும், பதுங்கு குழிகளிலும் வீசப்பட்டிருந்தன. ரஷ்யாவின் கொடூர தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள உலக நாடுகள், ரஷ்யாவுக்கு பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளதோடு உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு மருந்து பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள், ராணுவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், போருக்கும் மத்தியிலும் உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு சென்றுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அங்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். இருவரும் இணைந்து கீவ் நகர வீதிகளில் சென்று மக்களோடு மக்களாக உரையாடி உள்ளனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் கீவ் நகரின் மையப்பகுதியில் மக்களை சந்தித்து உரையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாயகம் என்றால் இப்படித்தான் இருக்கும்! தைரியம் என்றால் இப்படித்தான் இருக்கும்! மக்களுக்கும், நாடுகளுக்கும் இடையிலான உண்மையான நட்புறவு என்றால் இப்படித்தான் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.