×

 இந்தியா உள்பட 16 நாடுகளுக்குச் செல்ல தடை.. - சவுதி அரேபிய அரசு அதிரடி உத்தரவு.. 

 

இந்தியா  உள்பட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.  

கடந்த 2019-ஆம் ஆண்டு   டிசம்பர் மாதம் முதன் முதலாக சீனாவில் கண்டறியப்பட்ட  கொரோனா வைரஸ்,  பின்னர் உலகம் முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.   இந்தியாவை  பொறுத்தவரை 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.   அந்த ஆண்டு முழுவதும்  இந்தியா, சீனா , அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது, விமான போக்குவரத்து சேவைகளும்  நிறுத்தப்பட்டன. இதனால்  வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட மக்கள் தயாகம் திரும்ப முடியாமல் அவதிக்கு ஆளாகினர்.

பின்னர்  உலகம் முழுவதும்  பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி  அறுமுகப்படுத்தப்பட்ட   பிறகு கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இருப்பினும் ஒரு சில நாடுகளில்  கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா 3 வது அலை முடிந்து 4வது அலை உருவாகிவருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.  அந்தவகையில்  சவுதி அரேபியாவில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே அங்கு  தினசரி தொற்று விகிதம்  உயர்ந்து வருகிறது. இந்தநிலையில்,  சவுதி அரேபிய மக்கள் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியா, லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மேனியா, பெலாரஸ், வெனிசுலா  போன்ற  நாடுகளுக்குச்  செல்ல தடை விதித்திருக்கிறது.  ஆனால் அதேவேளை,  இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா செல்லும் மக்களுக்கு  இதுவரை எந்தவித  கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.  அத்துடன் தற்போது உலகம் முழுவதும் அதிகளவில் பரவி வரும்  குரங்கு அம்மை வைரஸ் குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அந்நாடு கூறியிருக்கிறது.