×

உக்ரைனுக்கு செம செக்.. 2ஆம் பெரிய நகருக்குள் என்ட்ரி - 3 நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா!

 

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் வலுத்து வருகிறது. ரஷ்யா தொடர்ந்து நான்காவது நாளாக தாக்குதல் தொடுத்து வருகிறது. நேட்டோ பிரச்சினையை மையமாக வைத்து ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் நீண்ட காலமாகவே பிரச்சினை இருந்து வந்தது. ரஷ்யாவின் மிக மிக நெருங்கிய நாடு உக்ரைன் தான். உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அதன் படைகள் ரஷ்யாவை நோக்கி நிற்கும். நேட்டோ அமெரிக்காவின் தலைமையில் செயல்படுகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் ரஷ்யாவை அமெரிக்கா நேரடியாக எதிர்ப்பதற்குச் சமம். 

இதைத் தான் ரஷ்யா தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கிறது. இதனாலேயே உக்ரைனை நேட்டோவில் இணையக் கூடாது என வலியுறுத்தியது. ஆனால் உக்ரைன் மறுத்து வந்ததால் ரஷ்யா ஊடுருவியுள்ளது. நான்காவது நாளாக தொடரும் தாக்குதலில் நேற்று முன்தின மாலையிலிருந்து விடிய விடிய உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் கடும் தாக்குதல்களைத் தொடுத்தது. இதில் கடற்படை நகரமான மெலிட்டோபோல் நகரம் நேற்று கைப்பற்றப்பட்டது. இதன்மூலம் மற்ற நாடுகள் கடல் வழியே உக்ரைனுக்கு உதவுவதை நிறுத்தியுள்ளது.

அதேபோல பாம்பு தீவு, லூஹான்ஸ்க், டொனெட்ஸ்க், குளுகோவ் பிரதேசம், செர்னோபில் அணு உலை வெடித்த இடம் உள்ளிட்டவற்றையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது. குறிப்பாக உக்ரைன் தலைநகர் கீவ்வை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி கொண்டிருக்கிறது. ஆனால் உக்ரைன் ராணுவ வீரர்கள் திடக்காத்திரமாக அங்கு சண்டை செய்வதால் இன்னும் சில நாட்கள் பிடிக்கலாம் என தெரிகிறது. கீவ் நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் தான் ரஷ்ய ராணுவம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சூழலில் மேலும் மூன்று நகரங்களைக் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உக்ரைனின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளிலுள்ள இரு நகரங்களை கைப்பற்றியிருக்கிறது. தெற்கு உக்ரைனில் நீர்மின் நிலையம் அதிகம் இருக்கும் நோவா ககோவ்கா நகரை ரஷ்ய துருப்புகள் கைப்பற்றியுள்ளன. இதனை அந்த நகரின் மேயர் ஒப்புக்கொண்டுள்ளார். அதேபோல தெற்கில் உள்ள கெர்சன் மற்றும் தென்கிழக்கு நகரமான பெர்டியன்ஸ்க்கையும் ரஷ்ய ராணுவம் அபகரித்துள்ளது. குறிப்பாக தலைநகர் கீவ்க்கு அடுத்தப்படியாக மிகப்பெரிய நகரமாக இருக்கக் கூடிய கார்கிவ்வுக்குள் ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர். அங்குள்ள தெருக்களில் இரு நாட்டு படை வீரர்களும் ஆயுதங்களுடன் போரிட்டு கொண்டிருக்கின்றனர்.