×

ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்காம் அரண்மனை வந்தடைந்தது!!

 

மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல் லண்டன் பக்கிங்காம் அரண்மனை வந்தடைந்தது.

பிரிட்டன் மகாராணி எலிசபெத் (96) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 8ஆம் தேதி உயிரிழந்தார். பிரிட்டன் மகாராணி ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் தங்கி இருந்தபோது திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் .  இதையடுத்து மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  எலிசபெத் தனது வாழ்நாளில் 70 ஆண்டுகாலம் ராணி பட்டம் பெற்று ஆட்சி நடத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து புதிய மன்னராக சார்லஸ் பொறுப்பேற்றுள்ளார்.

 ராணி எலிசபெத்தின் உடல், ஓக் மரத்தைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு,  பால்மோரல் கோட்டையில் இருந்து கடந்த 11-ந்தேதி, ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர்  ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்ட உடலுக்கு அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு  ராணி எலிசபெத்தின் உடல் எடுத்துச்செல்லப்பட்டு மக்கள் அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில் மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்காம் அரண்மனை வந்தடைந்தது. அரண்மனையில் 24 மணிநேரம் உடல் வைக்கப்படுகிறது; பிறகு வெஸ்ட்மின்ஸ்டரில் மக்கள் அஞ்சலிக்காக 3 நாட்கள் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் ராணியின் உடலுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.