×

இலங்கையின் புதிய அதிபர் யார் ? - இன்று தேர்தல்

 

இலங்கையின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு  ராஜபக்சே குடும்பமே காரணம் என , அரசுக்கு எதிராக மக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.   மக்கள் போராட்டம் வெடித்ததும், மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலகி, ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்..  ஆனால் அதன்பிறகும் அங்கு  பிரச்சனைகளும், நெருக்கடிகளும் குறைந்தபாடில்லை. மக்கள் போராட்டமும் முடிவுக்கு வரவில்லை.   அதிபர்  மக்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்ததால் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது.   இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருடன் மாலத்தீவுகளுக்கு தப்பியோடினார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றார். பின்னர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து இலங்கையின் காபந்து அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார்.  


இந்நிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.  இலங்கை அரசியல் வரலாற்றில் முதல்முறையாக, நடாளுமன்றத்தில் ஓட்டு போட்டு அதிபரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை இன்று நடக்க உள்ளது. இதற்கு முன்வரை, பிரதமரை மக்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த பின், அக்கட்சியை சேர்ந்த ஒருவரை, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தேர்ந்தெடுத்து வந்தனர்.  புதிய அதிபருக்கான தேர்தலில், தற்போதைய காபந்து அதிபர் ரணில் விக்ரமசிங்கே,  இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தி குழுவின் முக்கிய தலைவரான டல்லாஸ் அழகப்பெரும மற்றும் இடதுசாரி கட்சியான, ஜனதா விமுக்தி பெரமுன கட்சியை சேர்ந்த அனுரா குமார திசநாயகே, ஆகியோர் போட்டியிடுகின்றனர். டல்லாஸ் அழகபெருமவுக்கே அதிகளவிலான ஆதரவுகள் இருப்பதால் அவரே அடுத்த அதிபராக வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.