×

இந்தோனேசியா நாட்டில் பயங்கர நிலநடுக்கம் - 40க்கும் மேற்பட்டோர் பலி

 

இந்தோனேசியா நாட்டின் மேற்கு ஜாவா தீவு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா ஒரு தீவு நாடாகும். இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகும்.
இந்நிலையில், இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  சியாஞ்சூர் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.6  ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில், மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவு முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின் காரணமாக மின்சாரம் துண்டிப்பு, உடமைகள் இழப்பு, கால்நடைகள் பாதிப்பு என அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படுகாயமடைந்தவர்களில் ஏராளமானோர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.