×

ஒமைக்ரானுக்கு ஸ்பெஷல் மருந்து "பெப்டெலோவிமேப்"... அமெரிக்க அரசு அனுமதி! 

 

ஒமைக்ரான் வெற்றிக்கரமாக உலகம் முழுவதும் தனது கிளையைப் பரப்பியுள்ளது. இரண்டே மாதத்தில் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி மிகப்பெரிய அலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனா இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது. அதற்கு ஒமைக்ரானே சாட்சி. ஏனென்றால் இதுவரை வந்ததிலேயே அபாயகரமானது டெல்டா தான். ஆனால் அந்த டெல்டாவை விஞ்சும் அளவுக்கு வேகம் கொண்டது ஒமைக்ரான். ஆனால் மிகச் சிறிய அளவிலான பாதிப்பை தான் ஏற்படுத்துகிறது. 

அதேசமயம் இரண்டு தடுப்பூசி செலுத்தியவர்களை டெல்டா தாக்குவது வாய்ப்பு குறைவு தான். ஆனால் ஒமைக்ரான் மூன்று டோஸ் போட்டாலும் விடுவதில்லை. எளிதாக நோய் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி மனிதர்களுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனாலும் கூட தொற்று பாதித்த மூன்று நாட்களில் ஓடி விடுகிறது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவதில்லை. வீட்டிலிருந்தேபடியே ஒமைக்ரானை விரட்டிவிட முடிகிறது. இருந்தாலும் அது வரவிடாமல் தடுக்க வேண்டும் அல்லவா?

அதற்கான முயற்சியில் தான் மாடர்னா தடுப்பூசி நிறுவனம் ஈடுபட்டிக்கிறது. ஏற்கெனவே இருந்த தடுப்பூசியில் சில மாற்றங்களை ஏற்படுத்தி ஒமைக்ரானுக்கென பிரத்யேக புதிய தடுப்பூசியை மாடர்னா கண்டுபிடித்துள்ளது. இதனை வைத்து சோதனையிலும் இறங்கியுள்ளது. இச்சூழலில் ஒமைக்ரானுக்கென பிரத்யேகமாக அமெரிக்காவைச் சேர்ந்த எலி லில்லி எனும் நிறுவனம் பெப்டெலோவிமேப் மருந்தை கண்டுபிடித்துள்ளது. இம்மருந்தானது ஒமைக்ரானின் திரிபான BA.2 வைரஸையும் எதிர்க்கும் ஆற்றல் கொண்டுள்ளது.

ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு குறைவான மற்றும் மிதமான பாதிப்புகளை கொண்ட நோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்படவுள்ளது. ஊசி மூலம் நோயாளிகளுக்கு செலுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இம்மருந்திற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அனுமதியளித்துள்ளது. இந்த மருந்தின் சுமார் 6 லட்சம் டோஸ்களை அமெரிக்க அரசே சுமார் 720 மில்லியன் டாலர்களுக்கு வாங்குவதாக அறிவித்துள்ளது.