×

ஆப்கன் நிலநடுக்கம் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,150 ஆக அதிகரிப்பு

 

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,150 ஆக உயர்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில்  கடந்த புதன்கிழமை  அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்திலுள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம்,  51 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. மேலும் இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியிருந்தது.  இந்த பயங்கர நிலநடுக்கத்தால்  வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.  கட்டிட  இடிபாடுகளில் சிக்கி நிகழ்விடத்திலேயே 1000   பேர் உயிரிழந்தனர்.   படுகாயமடைந்த  3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவற்றில் பலர் மோசமான நிலையில் உள்ளதால் சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்து வருகின்றனர்.  நேற்று வரை 1,100 ஆக  இருந்த பலி எண்ணிக்கை இன்று 1150 ஆக அதிகரித்துள்ளது.  பலியானோரின்  உடல்கள் அனைத்தும்   ஒரு இடத்தில் அடக்கம் செய்யப்படுகின்றன.  அத்துடன் படுகாயமடைந்து  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில்,  பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு  அதிகரிக்கலாம் என்றும் மருத்துவர்கள்  எச்சரித்துள்ளனர்.  

இந்த நிலநடுக்கம்  ஆப்கானிஸ்தானில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  ஈரான்,  கத்தார்,  பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு  உதவிக்கரம் நீட்டியுள்ளன.  அதேபோல் ஆப்கானிஸ்தானுக்கு  இந்தியா வழங்கியுள்ள முதல்கட்ட நிவாரண பொருட்கள் தலைநகர் காபூல் சென்று சேர்த்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம்  தெரிவித்திருக்கிறது.  மீட்பு நடவடிக்கைகளுக்காக  கனரக இயந்திரங்களையும் இந்தியா ஆப்கனுக்கு அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.