×

இங்கிலாந்தின் புதிய அரசராக 3ம் சார்லஸ் முறைப்படி பதவியேற்பு

 

இங்கிலாந்து புதிய அரசராக மூன்றாம் சார்லஸ் இன்று முறைப்படி பதவி ஏற்றார்.

இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 96. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த அவருக்கு சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், பிரான்ஸ் மன்னருக்கு அடுத்து ஒரு அரசை அதிக காலம் (70 ஆண்டுகள்) ஆட்சி செய்தவர் என்ற பெருமையுடன் விடைபெற்றார். பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத். இவர், கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்தார்.  ராணி எலிசபெத் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அந்நாட்டு அரசராக சார்லஸ் அறிவிக்கபட்டார். 73 வயதான சார்லஸ் மறைந்த ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார்.

இந்நிலையில், இங்கிலாந்து புதிய அரசராக இன்று சார்லஸ் முறைப்படி பதவி ஏற்றார். இதற்கான நிகழ்ச்சி லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவரது மனைவி கமீலா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சார்லஸ் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது ராணி எலிசபெத் மறைவு குறித்து அறிவித்ததுடன், தான் அரச பாரம்பரியத்தை காப்பாற்றுவதாக உறுதி அளித்தார்.   மறைந்த ராணி எலிசபெத் பாஸ்போர்ட் இல்லாமல் எந்த நாட்டிற்கும் செல்லக்கூடிய அதிகாரம் பெற்று இருந்தார். அதே போல் லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்ட கூடிய அதிகாரமும் அவருக்கு உண்டு. இந்த அதிகாரங்கள் எல்லாம் தற்போது புதிய அரசர் சார்லசுக்கு கிடைக்கும். இனி சார்லஸ் பாஸ்போர்ட் இல்லாமல் எந்த நாட்டுக்கும் பயணிக்கலாம். இங்கிலாந்து கரன்சியில் ராணி எலிசபெத் புகைப்படம் இடம் பெற்று இருக்கும். இனி அரசர் 3-ம் சார்லஸ் புகைப்படம் அச்சிடப்பட்டு புதிய கரன்சி வெளியிடப்படும்.