×

மலேசியாவின் புதிய பிரதமரை கொண்டாடும் தமிழர்கள்! யார் இவர்?

 

மலேசியாவில் கடந்த 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 222 எம்பி சீட்டுகளில் 112 இடங்களில் வெற்றிப்பெரும் கூட்டணி ஆட்சி அமைக்கும். ஆனால் தேர்தல் முடிவில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 

அன்வர் இப்ராஹீம் தலைமையிலான சீர்த்திருத்த கூட்டணி 82 இடங்களையும், முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் வலதுசாரி தேசியக் கூட்டணி 73 இடங்களையும் வென்றது. வலதுசாரி தேசியக் கூட்டணி கட்சியான பான்-மலேசிய இஸ்லாமியக் கட்சி 49 இடங்களைப் பெற்று மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. நீண்ட காலம் ஆட்சியில் இருந்த ஐக்கிய மலாய் கட்சி 30 இடங்களை மட்டுமே பெற்றது.

ஆட்சி அமைக்க மூன்று கட்சிகளும் பேச்சுவர்த்தையில் ஈடுபட்ட நிலையில், அவை தோல்வியில் முடிந்தன. இதனையடுத்து மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா தலையிட்டு, அன்வர் இப்ராஹீமை பிரதமராக அறிவித்தார். இது அன்வர் இப்ராஹீமின் 20 ஆண்டுகளாக பிரதமர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். 1990 களில் மகாதீர் பிரதமராக இருந்தபோது அன்வர் இப்ராஹீம் துணை பிரதமராக இருந்தார். 75 வயதுடைய அன்வர், மலேசியாவின் 10வது பிரதமராவார்.இவருக்கும் தமிழ்நாட்டுக்கும் தீவிர தொடர்பு உள்ளது. இவர் நடிகர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினியின் தீவிர ரசிகராவார்.

அன்வர் மீது சில குற்றச்சாட்டுக்கள், சிறைக்கு சென்றவர் என்ற அவப்பெயர் இருந்தாலும், இவர் மலேசியாவில் வாழும் இந்தியர்களுடன் நெருக்கமானவர். குறிப்பாக தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்தவருடன் மிகவும் நெருக்கம் காட்டுவார். இதனால் அன்வரின் வெற்றியை மலேசிய வாழ் தமிழர்கள் கொண்டாடிவருகின்றனர். இதனால் தற்போது அவரது கூட்டணியில் எம்பிக்களாக உள்ள தமிழர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.