இந்தோனேசியா மசூதியில் பயங்கர தீ விபத்து: இடிந்து விழுந்த கோபுரம்.. வைரலாகும் வீடியோ..
இந்தோனேசியாவில், ஜகார்த்தா பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மசூதியின் கோபுரங்கள் இடிந்து விழுந்தன. இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் மசூதி ஒன்று அமைந்துள்ளது. இந்த மசூதியில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென மசூதி முழுவதும் பற்றி எரியதொடங்கியது. இதில் முழுவதும் எரிந்து மசூதியின் கோபுரங்கள் இடிந்து கீழே விழுந்தது. இந்நிலையில், மசூதி கோபுரம் சரிந்து விழும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மசூதி கோபுரம் தீ விபத்தில் சரிந்து விழுவதையும், அந்தப் பகுதி முழுவதும் நெருப்பு துண்டுகள் பறந்து விழுவதையும் , புகை மண்டலமாக காட்சியளிப்பதையும் பார்க்க முடிகிறது. இதனால், அப்பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ எவ்வாறு பற்றியது என்பது தொடர்பான காரணங்கள் இதுவரை தெரியவில்லை என்றும், மேலும் இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பாதுகாப்பு பணியாளர்கள் கூறும் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும், விபத்து குறுத்து அதிகாரிகள் தெளிவு படுத்தும் வரை அப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும், அருகிலுள்ள குடியிருப்பு வாசிகள் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மசூதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.