×

"வாராது வந்த மாமணி... ஆசியாவின் ராணி" -  ரூ.2,000 கோடிக்கு விற்பனை?... இலங்கைக்கு அடித்த லக்கி பரிசு!  

 

தங்கம், வைரம் ஆகியவற்றுக்கு இருக்கும் மவுசை விட ரத்தின கல்களுக்கு எப்போதுமே அதிகம் தான். பல்வேறு நிறங்களில் இருக்கும் ரத்தினங்களை செதுக்கப்பட்டு, அணிகலன்களாகவும் பயன்படுத்தப்பட்டன. அனைத்து வகை ரத்தினங்களும் ஒரே மதிப்பில் இருக்காது. ஒவ்வொரு கல்லுக்கும் ஏற்ப விலை நிர்ணயம் செய்வார்கள். அந்த வகையில் மூன்று மாதங்களுக்கு முன்பு இலங்கையிலுள்ள ரத்னாபுராவில் நீல நிற ரத்தினக் கல் (மாணிக்கம்) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கல் என்றால் கையில் தூக்கக்கூடிய அளவிலான கல் அல்ல.

310 கிலோ எடை கொண்ட பாறை போன்ற ரத்தின கல். காரட் அளவில் பார்த்தால் 15 மில்லியன் காரட். இதற்கு "ஆசியாவின் ராணி" (Queen Of Asia) என பெயரிட்ட இலங்கை நாட்டின் தேசிய ரத்தினம் மற்றும் நகைகள் அமைப்பு, உலகிலேயே மிகப்பெரிய, அதேசமயம் கிடைப்பதற்கே அரிய நீலநிற ரத்தின கல் என்றும் வகைப்படுத்தியது. இந்த ரத்தின கல் அலுமினியம் ஆக்சைடு, டைட்டானியம், இரும்பு மற்றும் நிக்கல் ஆகிய கனிமங்களின் கலவையால் உருவானது என நிபுணர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்று கொண்டிருப்பதால்,  இந்த ரத்தின கல்லை சர்வதேச சந்தையில் விற்பனை செய்வதற்கு அரசு திட்டிருந்தது. இன்னும் சர்வதேச ரத்தின கல் அமைப்பால் இந்த நீல நிற கல்லுக்கு சான்றளிக்கப்படவில்லை. இருப்பினும் இந்தக் கல்லை வாங்குவதற்கு பல்வேறு நாடுகளிலுள்ள நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. தற்போது இந்த ரத்தின கல்லை வாங்குவதற்கு துபாய் நிறுவனம் ஒன்று விருப்பம் தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 2,000 கோடி ரூபாய்க்கு நீல நிற கல்லை வாங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.