இயற்பியலுக்கான நோபல் பரிசை தட்டிச்செல்லும் 3 விஞ்ஞானிகள்!
இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அமைதி ஆகிய பிரிவுகளுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பற்ற ஆய்வுகளை மேற்கொண்டவர்களுக்கும் மனிதகுலத்திற்கு பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள், கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் வழங்கப்படும் பரிசாக இது இருக்கிறது. இப்பரிசைப் பெறுபவர்கள் பெருமதிப்பு கொண்டவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். நோபல் பரிசு சர்வதேச அளவில் பெரிதும் போற்றத்தக்க மதிக்கப்படும் பரிசாகும்.
இதில் அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலுள்ள குழுவாலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலுள்ள கரோலின்ஸ்கா நிறுவன குழுவாலும் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில் 2021ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி மருத்துவ உலகில் மாபெரும் பங்காற்றிய அமெரிக்க விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ், ஆர்டம் படபூட்டியன் ஆகிய இருவருக்கு கூட்டாக நோபல் பரிசு வழங்கப்படவிருக்கிறது.
இச்சூழலில் இன்று இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜப்பானின் சியுகுரோ மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹாசில்மன், இத்தாலியின் ஜார்ஜியோ பாரிசி ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் சியுகுரோவும் ஹாசில்மனும் காலநிலை மாற்றத்தின் இயற்பியல் மாதிரியாக்கம், அதன் மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் புவி வெப்பமடைதலை சரியாக கணித்தல் ஆகியவற்றுக்கு நோபல் வழங்கப்படுகிறது. சிறிய அணுவிலிருந்து பருப்பொருள்கள் வரையிலான இயற்பியல் அமைப்புகளில் ஏற்படும் சீர்குலைவு மற்றும் ஏற்ற இறக்கங்களைக் கண்டறிந்ததற்கு பார்சிக்கும் சேர்த்து அளிக்கப்படுகிறது.