×

அடி தூள்.. எய்ட்ஸ் நோயிலிருந்து விடுபட்ட உலகிலேயே முதல் பெண் - ஸ்டெம் செல் சிகிச்சையில் மைல்கல்!

 

மனிதன் பிறந்தபோதே நோயும் சேர்ந்தே பிறந்துவிட்டது. முன்பெல்லாம் நோய்கள் வளர்ந்துகொண்டே சென்றாலும் அவற்றை தீர்ப்பதற்கான மருத்துவமும் அறிவியலும் வளரவில்லை. ஆனால் இப்போது நவீன மருத்துவம் வளர்ந்துவிட்டது. அறிவியலும் வளர்ந்துவிட்டது. தீரா நோய்களைக் கூட தீர்ப்பதற்கான சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. உறுப்பு மாற்று சிகிச்சை மருத்துவ உலகில் ஒரு மைல்கல் என்றால், ஸ்டெம் செல் சிகிச்சை மற்றொரு மைல்கல். ஒரு வீடு கட்டுவதற்கு அடித்தளம் மிகவும் முக்கியம். அது போல தான் ஸ்டெம் செல்களும். 

தாயின் கருப்பையில் உருவாகும் ஸ்டெம் செல்களிலிருந்து தான் குழந்தையின் அனைத்து உறுப்புகளும் உருவாகின்றன. எலும்பு மஜ்ஜை, ரத்தம், கருமுட்டை, தொப்புள்கொடி, நச்சுக்கொடி, தொப்புள்கொடி ரத்தம், மாதவிலக்கு ரத்தம், தசை, தோல், கொழுப்பு திசு, கல்லீரல், கணையம், மூளை ஆகியவற்றில் இந்த ஸ்டெம் செல்கள் உள்ளன. இந்த ஸ்டெம் செல்களைப் பொறுத்தவரை எந்த உறுப்பு பாதிப்படைந்திருக்கிறதோ அந்த உறுப்பில் செலுத்தினால் அந்த உறுப்பாகவே மாறிவிடும். உறுப்புகளின் அடிப்படை தான் இந்த ஸ்டெம் செல்கள்.

இவற்றைப் பிரித்துப் பாதுகாத்து பலதரப்பட்ட புற்றுநோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் வரும் நோய்கள் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களுக்கு சிகிச்சையளிக்க இந்த ஸ்டெம் செல்களைப் பயன்படுத்த முடியும். ஆனால் இதில் ஒரு சவால் இருக்கிறது. ஒருவரின் ஸ்டெம் செல்களுடன் மற்றொருவாரின் ஸ்டெம் செல்களுடன் பொருந்தி போக வேண்டும். அவர்களின் உடல் ஏற்றுக்கொள்ள வேண்டும். லட்சத்தில் ஒருவருக்கு தான் இது சாத்தியம். அதிலும் முறையாக செலுத்தவில்லை என்றால் தானம் பெறுபவரின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். ஆகவே இது மிக மிக கவனம் செலுத்தி செய்யக் கூடிய சிகிச்சை.

ஹெச்ஐவி நோய் உலகிலேயே குணப்படுத்த முடியாத கொடிய நோயாக பார்க்கப்படுகிறது. தற்போது அந்த நோயை ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் குணப்படுத்தியிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் அறிவித்துள்ளனர். ஆம் அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஒரு பெண் தான் எய்ட்ஸ் நோயிலிருந்து விடுபட்டுள்ளார். அவருடைய பெயர் மற்றும் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டனர். ஆகவே அவர் நியூயார்க் பெண் என்றே அழைக்கப்படுகிறார். அவருக்கு தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. 

அப்பெண்ணுக்கு 2013ஆம் ஆண்டு ஹெச்ஐவி தொற்று கண்டறியப்பட்டது. 2017ஆம் ஆண்டு ரத்த புற்றுநோயும் ஏற்பட்டுள்ளது. அப்போது அவருக்கு haplo-cord transplant எனும் ரத்த மாற்று அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதாவது தொப்புள் கொடி ரத்தத்திலிருந்த ஸ்டெம் செல்கள் தானமாக பெறப்பட்டு நியூயார்க் பெண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இச்சிகிச்சை முடிந்த பின் 3 ஆண்டுகள் அவரை கண்காணித்தனர். அதற்கு பின் ஹெச்ஐவிக்கான சிகிச்சையும் நிறுத்தப்பட்டது.

அதற்குப் பின் 14 மாதங்களான நிலையில் அவரது உடலில் மீண்டும் ஹெச்ஐவி வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை. இதன்பிறகே அவர் ஹெச்ஐவி மற்றும் புற்றுநோயிலிருந்து முழுவதுமாக குணமடைந்துவிட்டார் என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்துள்ளனர். உலகிலேயே எய்ட்ஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்த முதல் பெண் இந்த நியூயார்க் பெண் தான். இதற்கு முன்னர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு ஆண்கள் ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம் குணமடைந்தனர். ஆகவே இவர் ஸ்டெம் செல் சிகிச்சையால் குணமடைந்த மூன்றாவது நபராவார்.