கமலை சந்தித்த நடிகர் அருண் விஜய்... 'விக்ரம்' வெற்றிக்கு வாழ்த்து !
'விக்ரம்' பட வெற்றியை அடுத்து கமலை சந்தித்து அருண் விஜய் மற்றும் இயக்குனர் ஹரி வாழ்த்து தெரிவித்தனர்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது. கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகிய இருவரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் கொண்டாடும் படமாக உருவாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான இப்படம் இரண்டு வாரங்களை கடந்தும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த வெற்றிக்கு சொந்தக்காரரான கமலை சந்தித்து முக்கிய நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் அருண் விஜய், இயக்குனர் ஹரி மற்றும் யானை படக்குழுவினர் நடிகர் கமலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். கமலை அருண் விஜய் சந்தித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அருண் மற்றும் ஹரி கூட்டணியில் 'யானை' திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் ஜூன் 17-ஆம் தேதி வெளியாகவிருந்த இந்த திரைப்படம் திரையரங்கு பற்றாக்குறையால் ஜூன் 1-ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.