×

சென்னையில் காணாமல் போன சிறுமி குட்டையில் சடலமாக மீட்பு

 

சென்னை பல்லாவரம் அருகே காணாமல் போன வடமாநில 15-வயது சிறுமி, அழுகிய நிலையில் கல் குட்டையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் புள்ளுதாஸ் (வயது-41). இவர் கடந்த 15,வருடங்களாக பம்மல், நாகல்கேணி ஆதாம் நகர் பகுதியில் மனைவி ரிங்குதேவி மற்றும் மகள் அனிசா (வயது 15) உள்ளிட்ட நான்கு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். புள்ளுதாஸ் அதே பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார்.  அவரது மனைவி ரிங்குதேவி அருகில் உள்ள லெதர் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.மகள் அனிசா பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில்,கடந்த மூன்றாம் தேதி கணவன்,மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது தான் மகள் அனிசா இல்லாததால் பல இடங்களில் தேடிப் பார்த்தும் மகள் கிடைக்காததால்,அதிர்ச்சி அடந்த பெற்றோர், மறுநாள் (4-ஆம் தேதி) பம்மல், சங்கர் நகர் காவல் நிலையத்தில் மகள் காணவில்லை என்று புகார் அளித்தனர்.  அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, காணாமல் போன சிறுமியை வலை வீசி தேடி வந்தனர்.

 
இந்த நிலையில், சங்கர் நகர் காவல் நிலையம் பின்புறத்தில் உள்ள காமராஜபுரத்தில் உள்ள செங்கழுநீர் கல் குட்டையில் சிறுமி ஒருவரது பிணம் அழுகிய நிலையில் மிதப்பதாக அக்கம் பக்கத்தினர் தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர் . தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தண்ணீரில் இறங்கி சிறுமியின் உடலை மீட்டனர் பின்னர் இது குறித்து சங்கர் நகர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது.விரைந்து சென்ற போலீசார் உடலை பார்வையிட்ட போது காணாமல் போன வடமாநில சிறுமி அனிசா என்பது தெரியவந்தது. பின்னர் சிறுமியின் உடலை மீட்ட போலீசார் அதனை பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்  அதன் பின்னர் சிறுமி அனிசா,கல் குட்டையில் குளிக்க வந்த போது, நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி பலியானாரா? அல்லது வேறு யாரேனும் ஆசை வார்த்தை கூறி அவரை அழைத்துச் சென்றனரா?  என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர்கள் புகார் அளித்தல் அடிப்படையில் தாம்பரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யும் பொழுது வீடியோ உடன் பரிசோதனை செய்யப்படும் என போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன வடமாநில சிறுமி மர்மமான முறையில் கல் குட்டையில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.