விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு- புதுச்சேரி காவல்துறை
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவுக்கு, போலீஸ் அனுமதி மறுத்துவிட்டது. இதனால் டிஜிபியை சந்திக்க வந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து, செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் காரில் ஏறி தப்பி சென்றார்.
புதுச்சேரியில் வரும் 5ந் தேதி ரோடு ஷோ நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். காலாப்பட்டில் தொடங்கி, கன்னியக்கோவில் வரையிலும் ரோடு ஷோ நடத்தவும், சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகே மைக்கில் பேசவும் அனுமதி கேட்டு 3 நாட்களுக்கு முன்பு புதுவை தவெக நிர்வாகிகள் டிஜிபியிடம் மனு அளித்தனர். தொடர்ந்து முதல்அமைச்சர் ரங்கசாமியையும் சந்தித்து, ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கும்படி கோரினர். ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. கரூரில் நடந்த துயர சம்பவத்துக்கு பிறகு தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. சென்னை ஐகோர்ட்டு ரோடு ஷோ நடத்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சிகளின் பரிந்துரைகளை வழங்கும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதன்படி தமிழக அரசின் வழிகாட்டுதல்கள், அரசியல் கட்சிகளின் பரிந்துரைகள் ஐகோர்ட்டில் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு, இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. சென்னை ஐகோர்ட் டு கட்டுப்பாட்டின் கீழ் புதுச்சேரி மாநிலம் இடம் பெற்றுள்ளது. இதனால் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுகள், அனைத்தும் புதுவைக்கும் பொருந்தும். இதனால் புதுவை அரசும் ரோடு ஷோ தொடர்பான ஐகோர்ட்டு உத்தரவுக்காக காத்திருக்கிறது. இதனால் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி ஷோக்கு, போலீஸ் தலைமையகம் அனுமதி மறுத்துவிட்டது. இந்த நிலையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து இன்று புதுச்சேரிக்கு வந்தார். அவர் தவெக சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனு தொடர்பாக கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் டிஜிபி ஷாலினிசிங்கை சந்திக்க வந்தார். ஆனால் டிஜிபி அலுவலகத்தில் இல்லை. இதனால் மீண்டும் நாளை மறுநாள் டிஜிபியை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.டிஜிபி அலுவலகத்திலிருந்து வெளியே வந்த புஸ்சி ஆனந்திடம் நிருபர்கள் அனுமதி கிடைத்ததா? என கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் எதற்கும் பதில் தராமல், காரில் ஏறி தப்பி சென்றார்.