"யூனிட் ரூ.41.50-க்கு மின்சாரமா?" – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து டெண்டரை அதிரடியாக ரத்து செய்த அமைச்சர்!
தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய, இம்மாதம் 15ம் தேதி முதல், 31ம் தேதி வரை, தினமும் 1,500 மெகா வாட் மின்சாரத்தை, யூனிட், 35 ரூபாய்க்கு வாங்க மின் வாரியம், சில நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்தது. இது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நவ.,1 முதல், 2027 மே 31ம் தேதி வரை மின்சாரம் வாங்க, மின் வாரியம் சமீபத்தில் ‘டெண்டர்’ கோரியது. இதில், அதிகபட்சமாக, யூனின் மின்சாரம் 41.50 ரூபாய்க்கு வாங்கப்பட இருந்தது. இது தொடர்பான தகவல் வெளியானதும், சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து, மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்ட அறிக்கை: யூனிட், 37 ரூபாய் முதல் 41 ரூபாய் வரையிலான விலையில், நாங்கள் மின்சாரம் கொள்முதல் செய்யப்போவதில்லை. நாங்கள் இன்று டெண்டரை திறந்தோம். பல நிறுவனங்கள் மிக அதிக விலைகளை குறிப்பிட்டுள்ளன. அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான மின்சாரம், எங்களிடம் போதுமான அளவு இருப்பதாலும், அடுத்த கோடை காலத்திற்காக, மின்சாரம் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்படுவதாலும், இந்த விலைகள் நியாயமற்றவை. இதற்கிடையே, அடுத்த 20 ஆண்டுகளுக்கான, நடுத்தர மற்றும் நீண்டகால மின் கொள்முதலுக்கான டெண்டர்களை வெளியிட உள்ளோம். எனவே, இனி, அதிக விலைக்கு, எரிவாயு மின்சாரம் கொள்முதல் செய்யப்படாது. இந்த டெண்டரை ரத்து செய்யுமாறு, நான் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.