மது பிரியர்களுக்கு அடுத்த ஷாக்..! இனி குவார்ட்டர் பாட்டில் ரூ.150..!
மது பிரியர்கள் மதுபானத்தை குடித்து விட்டு, காலி பாட்டிலை சாலைகளில் வீசி செல்கின்றனர். இதனால், உடைந்த கண்ணாடி பாட்டில் குத்தி கால்நடைகள் உயிரிழப்பதுடன், மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், சுற்றுச்சூழலும் மாசடைகிறது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, காலி மது பாட்டில்களை, மது கடைகள் வாயிலாகவே திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, மது பாட்டிலை விற்கும்போது கடை ஊழியர்கள் எம்.ஆர்.பி., எனப்படும் அதிகபட்ச சில்லரை விலையுடன் கூடுதலாக, 10 ரூபாய் சேர்த்து வசூலிக்கின்றனர். காலி பாட்டிலை திரும்ப கொடுத்ததும் அதற்காக வசூலிக்கப்பட்ட 10 ரூபாய், சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு தரப்படுகிறது. சில கடைகளில், 10 ரூபாயை விட கூடுதலாக வசூலிப்பது, காலி பாட்டிலை தந்தால், 10 ரூபாய் தர மறுப்பது போன்ற புகார்கள் எழுகின்றன.
காலி மது பாட்டில்களை மறுசுழற்சி செய்வதில் ஏற்படும் பிரச்னைக்கு தீர்வு காண, பாட்டிலுக்கு, 20 ரூபாய்க்கு மிகாமல் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை வரி விதிக்கப்பட உள்ளது. மதிப்பு கூட்டு வரி சட்டத்தில், இதற்கான திருத்தம் செய்யும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னரும் ஒப்புதல் அளித்து விட்டார். இம்மாத தொடக்கத்தில், மது பாட்டில் விலை, 10 ரூபாய் உயர்த்தப்பட இருந்தது.மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலால், அந்த முடிவு ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது, கடைகளில் காலி மது பாட்டிலை திரும்ப வழங்குவதற்காக எம்.ஆர்.பி., உடன் சேர்த்து, 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதை டாஸ்மாக் நிர்வாகம் கட்டாயமாக்க உள்ளது. இது, சில தினங்களில் அமலுக்கு வரவுள்ளது. இதுகுறித்து மதுவிலக்கு ஆயத்தீர்வை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடைகளில் காலி பாட்டில் திரும்ப வழங்குவதற்காக, பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. விரைவில், இந்த 10 ரூபாயும் சேர்த்து, பாட்டிலில் விலை அச்சிடப்படும்.
அதாவது, இதுவரை குவார்ட்டர் பாட்டில் 140 ரூபாய்க்கு விற்ற மது, இனிமேல் 150 ரூபாய்க்கு விற்கப்படும். அந்த விலை கொடுத்துதான் மது பாட்டிலை வாங்கியாக வேண்டும். கூடுதலாக 10 ரூபாய் தர தேவை இல்லை. காலி பாட்டிலை திரும்ப வழங்கியதும், 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும். காலி பாட்டிலை திருப்பி தந்தாலும் சரி, தராவிட்டாலும் சரி, அந்த விலைக்கு தான் 'சரக்கு' வாங்கியாக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். clcikbait titles