×

பேச கட்டுப்பாடுகள் என்றால் எதற்கு நாடாளுமன்றம்? - சீமான்

 

நாடாளுமன்றத்தில் பேச பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அப்புறம் எதற்கு நாடாளுமன்றம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்  கேள்வி எழுப்பியுள்ளார். 

கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீ விபத்து நிகழ்ந்த 18 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று நடைபெற்ற நிலையில், இன்று அப்பள்ளிக்குச் சென்று இறந்த 94 குழந்தைகளின் உருவப்படத்திற்கு சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பாதிக்கப்பட்ட பெற்றோர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது பள்ளிக் குழந்தைகள் உயிர் இழந்த பள்ளிக்கூட கட்டிடத்தில் குழந்தைகளை நினைவாக பூங்கா அமைக்க வேண்டும், ஆண்டு தோறும் நினைவு நாளில் குழந்தைகள் உருவப்படத்தில் வழிபாடு நடத்த வேண்டும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சீமானிடம் கேட்டுக் கொண்டனர். மேலும் பள்ளி தீ விபத்து நிகழ்ந்த போது பல்வேறு நடிகர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்வதாக தெரிவித்தனர். நடிகர் விஜயகாந்த் மட்டும் உதவிகள் செய்த நிலையில் மற்றவர்கள் உதவிகள் செய்யவில்லை என பெற்றோர்கள் சீமானிடம் தெரிவித்தனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “நீட் தேர்வை சந்திக்க முடியாமல் நமது  குழந்தைகள் உயிரிழக்கின்றனர். உயிர் இழப்பினால் நீட் தேர்வினை ஒன்றும் தடுத்து நிறுத்த  இயலாது, உயிருடன் இருந்து நீட் தேர்வுக்கு எதிராக போராட வேண்டும். 12-ம் வகுப்பிற்கு பிறகு நீட் தேர்வை எதிர்கொள்ள தயங்கும்  சூழ்நிலைகள் உள்ள நிலையில்,புதிய கல்விக் கொள்கையில் மூன்றாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு, ஐந்தாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு, எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு என கூறுவது எந்த விதத்தில் நியாயம், புதிய கல்வி கொள்கையை  ஏற்க முடியாது. நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்றத்தில் விவாதித்து சட்டங்கள் இயற்றுவதில்லை ,காவேரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, கட்சத்தீவு பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள் நீதிமன்றத்தின் மூலம் தீர்க்கப்பட்டு சட்டங்கள் இயற்றப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.