தாக்கரே தரப்புக்கு அண்ணாமலை நேரடி சவால் : நான் மும்பைக்கு வருவேன்; என் காலை வெட்டிப் பாருங்கள்..!
காங்கிரஸ் கட்சியை ஈழ படுகொலைக்குப் பிறகு எப்படி துரத்தினார்களோ, அதேபோல் காங்கிரஸுடன் யாரெல்லாம் கூட்டணி வைக்கிறார்களோ அவர்களும் இம்முறை வீழ்த்தப்படுவார்கள். ‘பராசக்தி’ திரைப்படம் திமுகவையே வீழ்த்தும். முதலில் சொந்த வீட்டில்தான் தீப்பிடிக்கும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆதித்ய தாக்கரே, ராஜ் தாக்கரே எல்லாம் யார்? மூன்று தாக்கரேக்கள் கூட்டம் போட்டு என்னை அவமானப்படுத்தி வருகிறார்கள். அங்கிருந்து என்னை மிரட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த அளவுக்கு நான் உயர்ந்து விட்டேனா என தெரியவில்லை. மும்பைக்கு வந்தால் காலை வெட்டுவேன் என எழுதி இருக்கிறார்கள். நான் மும்பைக்கு வருவேன்; என் காலை வெட்டிப் பாருங்கள். இந்த மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் பயந்திருந்தால் நான் என் ஊரில் தான் இருந்திருக்க வேண்டும்” என்று சவால் விட்டார்.
சிபிஐயிடம் விஜய் ஆஜராவது குறித்த கேள்விக்கு, “சிபிஐ விசாரணைக்கு விஜய் சென்று இருக்கிறார். சம்மன் கொடுப்பதால் யாரும் குற்றவாளி ஆகி விட முடியாது. சம்மனுக்கு முறைப்படி ஆஜராகிறார். இதில் நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை" என்றார்.
‘ஜனநாயகன்’ பட விவகாரம் குறித்த கேள்விக்கு, "ஜனநாயகன் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன் தான். படத்தை பார்க்காமல் தவறு, சரி என நான் எப்படி சொல்ல முடியும்?” என்றார்.
வருகிற சட்டமன்ற தேர்தல் குறித்து கேட்டதற்கு பதிலளித்த அண்ணாமலை, “ஒரு ஆட்சிக்கு நிறை குறை கட்டாயம் இருக்கும். இந்த ஆட்சிக்கு குறைகள் அதிகமாக இருக்கின்றன. நிறைகள் குறைவாகவே இருக்கிறது. மக்கள்தான் வரும் சட்டமன்ற தேர்தலில் எஜமானர்கள். மக்கள்தான் இந்த ஆட்சிக்கு மதிப்பெண் வழங்க வேண்டும். பல்வேறு அமைப்புகள் ஊழல் குறித்து பேசுகிறார்கள். சாதாரண மனிதர்களையும் இது பாதிக்கக்கூடியது.
இது சாதாரண தேர்தல் அல்ல. தமிழகத்தில் நீண்டநாட்களுக்கு பிறகு நான்கு முனை போட்டி இருக்கிறது. சீமானை யாரும் லேசாக எடை போட வேண்டாம். கொள்கைக்காக ஒரு மனிதன் துணிந்து தனித்து நின்று கொண்டே இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் எட்டரை சதவீத வாக்கு வாங்கி இருக்கிறார்.
விஜய்யும் வலிமையாக களத்தில் வந்திருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை அனுபவமும் இருக்கிறது, வலிமையும் இருக்கிறது, மோடியின் ஆசிர்வாதமும் இருக்கிறது. திமுகவையும் சாதாரணமாக எடை போடக்கூடாது. இந்தியாவில் உள்ள பிராந்திய கட்சிகளில் திமுக பழமையான கட்சி. பல வெற்றி தோல்விகளை பார்த்துள்ள கட்சி.
கூட்டணியில் யார் இணைவார்கள், யார் பிரிவார்கள் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்னும் காலம் இருக்கிறது. திமுகவை வீழ்த்த நினைக்கும் ஒத்த கருத்துடைவர்கள் ஒரே அணியில் இணைவது சரியானதுதான். இருந்தபோதிலும், மக்கள் கொள்கைகளையும் பார்க்கிறார்கள். நேரெதிர் கொள்கைகளை கொண்டவர்கள் இணைந்தால் சைவ -அசைவ பிரியாணியை வைத்து சாப்பிடுங்கள் என்று சொல்வதை போல இருக்கும்” என்றார்.