தலைநகர் டெல்லியில் அதிகாலையில் திடீர் நிலநடுக்கம்..!!சாலைகளில் தஞ்சமடைந்த பொதுமக்கள்
இன்று (ஆக. 2) அதிகாலை தலைநகர் டெல்லியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த போது வீடுகள் குலுங்குவதை உணர்ந்த மக்கள், அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனால், அதிகாலையிலேயே தலைநகரில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பலர் தூங்கிக் கொண்டிருந்ததால், இந்த நிலநடுக்கத்தை உணரவில்லை என கூறுகின்றனர்.
இந்த நிலநடுக்கத்தை தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையத்தில் எக்ஸ் பக்கத்தில், வடக்கு டெல்லி மாவட்டத்தில் இன்று அதிகாலை 04:14:01 IST மணிக்கு 2.9 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் வடக்கு அட்சரேகை: 28.721° - கிழக்கு தீர்க்கரேகை: 76.957° என பூமிக்கு அடியே 8 கி.மீ ஆழத்தில் பதிவானது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் குறைந்த ஆழத்தில் ஏற்பட்டதால், சுற்றியுள்ள பகுதிகளிலும் லேசான அதிர்வுகள் உணரப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல, அசாம் மாநிலம் பார்பேட்டா பகுதியில் காலை 05:25:03 IST மணிக்கு 2.4 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் வடக்கு அட்சரேகை 26.239° - கிழக்கு தீர்க்கரேகை 91.151° என பூமிக்கு அடியே 4 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.