×

டிட்வா புயலால் சின்னாபின்னமான ராமேஸ்வரம்- வீடுகளுக்குள் முடங்கிய மீனவ மக்கள்

 

ராமேஸ்வரம் அடுத்த மண்டபத்தில் கடல் சீற்றம் காரணமாக மண்டபம் வடக்கு கடற்கரை ஓரத்தில் போடப்பட்ட சாலையானது முற்றிலும் கடல் அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்ததால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை சீரமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் தோனித்துறை பகுதியில் 50 க்கு மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரம் தீவுப்பதி முழுவதும் மணிக்கு 50 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தை காற்று வீசி வருவதோடு கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மண்டபம் தோனித்துறை பகுதியில் ஏற்பட்ட  கடல் சீற்றம் காரணமாக கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த சாலை முழுமையாக சேதமடைந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு  உள்ளதால் அன்றாட அத்தியாவசிய தேவையான அரிசி, பால், பருப்பு, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாமல் மீன்வ கிராம மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மீனவ மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.