கோவை கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட் நியூஸ்! சர்வதேச மைதானம் அமையுமா? பேரவையில் எழுந்த முக்கிய கேள்வி!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி, அதிமுக ஆட்சியின்போது அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன் மூலம் கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும், அதில் ஒன்று பாரதியார் பல்கலைக்கழக இடம் என்றும் தெரிவித்தார். இந்த முறையாவது பாரதியார் பல்கலைக்கழகத்தில் அல்லது ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ஜி ஸ்கொயர் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 10 ஒலிம்பிக் மையங்களில் கோயம்புத்தூரும் முக்கியமான பகுதியாக இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும், கடந்த ஆட்சிக்காலத்தில் கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்காக தனியார் ஒப்பந்தம் கோரப்பட்டதாகவும், ஆனால் எந்த தனியார் நிறுவனமும் முன்வரவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து, கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டமிடப்பட்ட அந்த இடம் தற்போது வரை தமிழக விளையாட்டுத்துறையின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும், எஸ்.பி. வேலுமணியின் கோரிக்கையை பரிசீலித்து கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.title