×

கோவிலில் கூழ் காய்ச்சியபோது வலிப்பு!  கொதிக்கும் அண்டாவில் தவறி விழுந்த பரிதாபம்

 

ஆடி வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு அம்மன் கோவிலில் கூழ் காய்ச்சி கொண்டிருந்த போது திடீரென்று அந்த நபருக்கு வலிப்பு வந்ததால் கொதிக்கும் கூழ் அண்டாவில் தடுமாறி விழ, அண்டா கவிழ்ந்து அதிலுள்ள கூழ் கீழே கொட்ட அதன் மேல் அந்த நபர் விழந்ததால்  கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம்  கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.   மதுரையில் நடந்திருக்கிறது இங்கு அதிர்ச்சி சம்பவம்.

மதுரையில் பழங்காநத்தம் மேலத் தெரு பகுதியில் இருக்கிறது முத்து மாரியம்மன் கோவில்.   ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம்.   இன்று  ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையினை முன்னிட்டு ஆறுக்கும் மேற்பட்ட பெரிய அண்டாவை வைத்து மாலையில் கூழ் காய்ச்சிக்  கொண்டிருந்திருக்கிறார்கள்.

மேலத்தெருவை சேர்ந்த முருகன் என்கிற 54 வயது கொத்தனார்,  கூழ் காய்ச்சுவதற்கு உதவி செய்து கொண்டு இருந்திருக்கிறார் .  அப்போது திடீரென்று அவருக்கு வலிப்பு வந்திருக்கிறது.   அதில் அவர் தடுமாறி கொதித்துக் கொண்டிருந்த கூழ் அண்டாவின் மேல் விழ, அண்டா கவிழ்ந்து கூழ்  தரையில் பரவ அதன் மேல் விழுந்து துடித்திருக்கிறார் முருகன்.  

 அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வரவைத்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.   மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.