×

ஆலந்துார் தொகுதியில் சேலஞ்ச் ஓட்டு போட்ட வாக்காளர்கள்..!

 

ஆலந்துார் தொகுதியில், தி.மு.க., - - அன்பரசன், அ.தி.மு.க., - - சரவணன், நா.த.க., -- மகாலட்சுமி, த.வெ.க., - -ஹரீஷ் உள்ளிட்ட 23 பேர் போட்டியிட்டனர். நேற்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியது. அப்போது, பலரின் ஓட்டுக்கள் கள்ள ஓட்டாக போடப்பட்டு உள்ளதாக, சரவணன் குற்றம் சாட்டினார். இதுகுறித்து, விசாரிப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

நங்கநல்லுார் பாகம் எண், 397ல் ஓட்டு இயந்திரம் துவக்கத்திலேயே பழுதானது. இதையடுத்து, மாற்று இயந்திரம் பொறுத்தப்பட்டு ஓட்டுப் பதிவு துவங்கியது. பாகம் எண், 358ல் இயந்திரம் பழுதால், ஒரு மணிநேரம் ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது. நங்கநல்லுார், மாடர்ன் பள்ளி, பாகம் எண், 403ல் வரிசை எண், 688 மல்லீஸ்வரி, 687 சுவாமிநாதன் ஆகிய இருவரும் ஒட்டு போட வந்தபோது, அவரின் ஓட்டுகள் கள்ள ஓட்டாக போடப்பட்டிருந்தது.

இதையடுத்து, இருவரும், 'சேலஞ்ச்' ஓட்டு போட்டனர். இதேபோல தொகுதி முழுதும், பலர் 'சேலஞ்ச்' ஓட்டு போட்டுள்ளதாக, அ.தி.மு.க.,வினர் புகார் தெரிவித்துள்ளனர். 

 

சேலஞ்ச் ஓட்டு (Challenge Vote) : 

ஒருவர் வாக்களிக்க வரும்போது, அவருடைய அடையாளத்தின் மீது அங்கிருக்கும் வேட்பாளரின் முகவர்களுக்கோ (Polling Agents) அல்லது அதிகாரிகளுக்கோ சந்தேகம் ஏற்பட்டால், அவர்கள் அதனை "சேலஞ்ச்" செய்யலாம். இதனைத் தான் "சேலஞ்ச் ஓட்டு" என்கிறோம். முகவர் அந்த நபரின் அடையாளத்தை எதிர்க்க விரும்பினால், அதற்கு ஆதாரமாக ₹2 (இரண்டு ரூபாய்) கட்டணமாகச் செலுத்த வேண்டும். தேர்தல் அதிகாரி உடனே அந்த நபரிடம் விசாரணை நடத்துவார். அவரது அடையாள ஆவணங்கள் சரியாக இருந்தால், அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார். ஒருவேளை அந்த நபர் கள்ள ஓட்டு போட வந்துள்ளார் என்பது உறுதியானால், அவர் உடனடியாகக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார். முகவர் செலுத்திய ₹2 அவரிடமே திருப்பித் தரப்படும்.