☰
×

'அரட்டை பிசினஸ்' செயலியை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது ஜோஹோ..!

 

'ஜோஹோ' நிறுவனம் தனது 'அரட்டை பிசினஸ்' (Arattai for business) ஆப்பை, அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. அரசுத் துறைகள் மற்றும் பொதுச் சேவைகளுக்கு இது முற்றிலும் இலவசம் என அந்நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு அதிரடியாக அறிவித்துள்ளார்.​இந்தியாவில் உருவான மெசேஜிங் ஆப்பான 'அரட்டை', ஏற்கனவே மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வர்த்தக நிறுவனங்களைக் குறிவைத்து 'அரட்டை பிசினஸ்' அறிமுகப்படுத்தி உள்ளது.​

 

இதுகுறித்து ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட பதிவு:

தொழில் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுடன் சுலபமாகத் தொடர்பு கொள்ளும் வகையில் 'அரட்டை பிசினஸ்' ஆப், பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும், பல்வேறு சாப்ட்வேர் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் 'அரட்டை பிசினஸ் பிளாட்பார்ம்' தளமானது, ரயில்வே உள்ளிட்ட அனைத்து அரசு மற்றும் பொது நல சேவைகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.​


அரசுத் துறைகளைத் தவிர்த்து, கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளை ஊக்குவிக்கும் விதமாக, இந்நிறுவனங்களுக்கு மாதம் 10 லட்சம் மெசேஜ்கள் வரை முற்றிலும் இலவசமாக அனுப்பும் அதிரடிச் சலுகையையும் ஜோஹோ வாரி வழங்கியுள்ளது.


வாட்ஸ்அப் நிறுவனம் தனது 'வாட்ஸ்அப் பிசினஸ்' சேவையில், ஆர்டர் உறுதி செய்தல், டெலிவரி அப்டேட் போன்ற சேவைகளுக்கு அக்டோபர் 1 முதல் கட்டண முறையை மாற்றியமைத்து வசூலைத் தொடங்கியுள்ளது. வாட்ஸ்அப் கட்டணத்தை உயர்த்திய அடுத்த நாளே, ஜோஹோ களமிறங்கி, இலவச சலுகைகளுடன் 'அரட்டை பிசினஸ்' தளத்தை அறிவித்து, அதிரடி காட்டியுள்ளது. ​முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த ஆப், முழுமையான பாதுகாப்பு (End-to-End Encryption) மற்றும் டேட்டா பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.